‘ஆனந்த விகடன்’ வாசகர்களுக்காக வாரந்தோறும் ஒவ்வொரு விஷயத்தைப் பரிந்துரைக்கிறார்கள் பிரபலங்கள். இந்த வாரம் எழுத்தாளர் யூமா வாசுகி.
மொழிபெயர்ப்பு மகத்தானதொரு பெருங்கலை என்பதை ஒவ்வொரு மொழிபெயர்ப்பின்போதும் உணர்கிறேன். சமயங்களில் மொழிபெயர்ப்பில் தடுமாறி நிற்கும் கணங்களும் உண்டு; அந்த மொழிபெயர்ப்பின் ஓட்டத்தில் தன்னையே கரைக்கும் அற்புத கணங்களும் வாய்ப்பதுண்டு.
ஓவியப் பயிற்சியின் பகுதியாக மாணவர்கள், சொந்தப் பயிற்சியில் ஓவியம் தீட்டுவார்கள். அதில் அவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. அந்த ஓவியம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் ஒரு வண்ணத்துப்பூச்சி பல்வேறு பூக்களில் தேனெடுத்துப் பறந்தலைவதைப்போன்று மிக இலகுவாக, மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்கள் ஓவியத்தை வரைந்து முடிப்பார்கள். ஆனால் அவர்களுக்கு, அஞ்சலட்டை அளவே இருக்கும் பழங்கால நுணுக்க ஓவியத்தைப் (miniature Painting) பார்த்து, அப்படியே அதே அளவில் எதுவும் மாறாமல் வரையும் பயிற்சியும் கட்டாயமாகும். இதற்குத்தான் மாணவர்கள் பெரும்பாடுபடுவார்கள். இது அவர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கும்.
சர்வமும் உறைந்துபோன ஆழ்நிலைத் தியானம் போலத்தான் அது. பார்த்துப் பார்த்துப் பரிசோதித்து வண்ணங்களைத் தேர்வு செய்து, மூலத்துக்கும் பிரதிக்கும் அணுவளவும் வித்தியாசமின்றி அச்சுஅசலாக அப்படியே உருவாக்குவதற்குப் பல மாதப் பேருழைப்பு தேவைப்படும். கடும் போராட்டம்தான். இதைப்போன்றதுதான் மொழிபெயர்ப்பும்.
ஓ.வி. விஜயனின் ‘கசாக்கின் இதிகாசம்’, ராகுல சாங்கிருத்தியாயனின் ‘வால்காவிலிருந்து கங்கைவரை’ முதலிய சில நூல்களை மொழிபெயர்க்கும்போது நான் இப்படிப்பட்ட வதையாழத்துள்தான் தலை அழுந்தக் கிடந்தேன்.
நம்முடைய இலக்கியங்கள் நம்முடைய பண்பாட்டையும் வாழ்க்கையையும் பிரதிபலிக்கின்றன. அதேபோல் பிறமொழி இலக்கியங்களும் அந்தந்த நாட்டின், மாநிலத்தின் பண்பாட்டைப் பிரதிபலிப்பது இயல்பு. மொழிபெயர்க்கும்போது வெறுமனே ஓர் படைப்பை மட்டும் நாம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில்லை, அந்த நாட்டின் பண்பாட்டை, மக்களின் வாழ்நிலையை, அரசியலை என அனைத்துக்கூறுகளையும் அறிமுகப்படுத்துகிறோம்
அதேநேரத்தில், ஒரு வாசகருக்குப் பிறமொழி இலக்கியங்கள் மூலம் இன்னொரு நிலப்பரப்பின் வாழ்க்கையை அறிமுகப்படுத்தும்போது அது வாசகரை முற்றிலும் அந்நியப்படுத்திவிடக்கூடாது. நம்முடைய பண்பாட்டு அனுபவங்களில் இருந்து பிறமொழி இலக்கியங்களை வாசிப்பதற்கான சூழலையும் மனநிலையையும் மொழிபெயர்ப்பாளர் வாசகர்களுக்கு ஏற்படுத்தித் தரவேண்டும்.
காதலென்பது எங்கெங்கும் என்றுமாய் நிறைந்திருப்பினும், வண்ணநிலவனின் கடல்புரத்தில் திளைத்த நாம், ரஷ்யப் பனி நிலக் காதலை வாசிக்கும்போது அது நமக்கு முற்றிலும் புதியதொரு உலகமாகிறது. அந்நிலத்தின் நாகரிகம், அதற்கான தனித்த கூறுகள், நூதன அனுபவங்களெல்லாம் நமக்குச் சுவைபடச் சேகரமாகின்றன. பிறகு அந்தப் படைப்பு நமக்கு அந்நியமற்ற ஒன்றாகிறது. அந்த மாந்தர்கள் நம் உறவுகளாகி நிலைக்கிறார்கள். அந்தப் பனி என்றென்றும் நினைவில் குளிர்கிறது.
காதலும் அற்றுப்போன துயரம் மிகுந்த இரவொன்றின் நிலவொளியில் தனியே நடக்கும் அந்த நாயகன், நம் வாழ்க்கை முழுதும் உடன் வருகிறான். மொழிபெயர்ப்புகள், உலகை உற்றறிந்து தழுவுவதற்கான உறுப்புகளைச் சமைக்கின்றன. மனித குலத்துக்கு வரம் போன்றவை அவை.
உதாரணத்துக்குச் சில:
1. சி.மோகன் மொழி பெயர்த்த, ‘ஜியாங் ரோங்’கின் ‘ஓநாய் குலச் சின்னம்’,
2. சீனிவாச ராமானுஜம் மொழிபெயர்த்த, ‘சதத் ஹசன் மாண்ட்டோ கதைகள்’,
3. வெ. ஸ்ரீராம் மொழிபெயர்த்த, ‘அந்த்வான்து செந்த் எக்சுபெரி’யின் ‘குட்டி இளவரசன்’,
4. பேட்டை எஸ். கண்ணன் மொழிபெயர்த்த, ‘ஜாக் சி. எல்லீஸ்’ எழுதிய, ‘உலக சினிமா வரலாறு’,
5. சா.தேவதாஸ் மொழிபெயர்த்த, ‘பாப்லோ நெருடா நினைவுக்குறிப்புகள்’,
6. சிவ. முருகேசன் மொழிபெயர்த்த, ‘மிகெல் டி செர்வாண்டிஸ்’ எழுதிய ‘டான் குயிக்ஸாட்’,
7. பாஸ்கரன் மொழி பெயர்த்த, ‘சரண்குமார் லிம்பாலே’ எழுதிய ‘நாதியற்றவன்’,
8. வி.நடராஜ் மொழிபெயர்த்த, ‘ஜெரோம் ஏ. கிரீன்’ எழுதிய ‘போர் நினைவுகள் 1876 - 1877: பழங்குடி அமெரிக்க இந்தியர்களின் மனப்பதிவுகள்’,
9. பொன் சின்னத்தம்பி முருகேசன் மொழிபெயர்த்த, ‘மார்க்கோபோலோ பயணக்குறிப்புகள்’
10. டி.எஸ். தட்சிணாமூர்த்தி மொழிபெயர்த்த, ‘யூழேன் இயொனெஸ்கோ’ எழுதிய, ‘காண்டாமிருகம்.’
இன்னும் இன்னும் பல மொழிபெயர்ப்பு நூல்கள் முக்கியமானவை.
- வி.எஸ்.சரவணன்
நன்றி: ஆனந்த விகடன்