நான் சினிமாவைப் புரிந்து கொள்ள இதை வாசிக்கவில்லை. ஒரு கலைவடிவம் எப்படித் திரண்டு உருவாகி வருகிறது என்று அவதானிக்க; அது எப்படி சமூகத்தின் பல்வேறு உள்ளோட்டங்களால் தன் தனித்துவத்தை அடைகிறது என்று பார்க்க; அதன் வீச்சு சமூகத்தை எப்படி மாற்றியமைக்கிறது என்று புரிந்துகொள்ள வாசித்தேன். சமீபத்தில் இத்தகைய ஒரு முழுமையான பார்வையை அளித்த பிறிதொரு நூலை நான் வாசிக்கவில்லை. அறுநூறு பக்கம் கொண்ட இப்பெரிய நூல் நெடுங்காலமாகவே ஒரு கிளாசிக் என்று கருதப்படுவது. இதை சரளமான மொழியில் தமிழாக்கம் செய்திருக்கிறார் வேட்டை எஸ்.கண்ணன். திருகலான செயற்கையான மொழிநடை காரணமாக பெரும்பாலான படைப்புகள் மொழியாக்கங்களில் பயனற்ற கற்பலகைகள் போல நம் கையில் இருக்கும் காலம் இது. வேட்டை எஸ். கண்ணணின் மொழியாக்கம் நாம் வாசித்தறிந்த இதழியல் நடை கொண்டது என்பதனால் எங்குமே மொழி குறித்த பிரக்ஞை இல்லாமல் வாசிக்க முடிகிறது.
-ஜெயமோகன்
19-ம் நூற்றாண்டில் பிறந்து, 20-ம் நூற்றாண்டில் வளர்ச்சியடைந்து தொழில்நுட்பம், உள்ளடக்கம், கலையம்சம் என்று பல பரிமாணங்களின் உச்சத்தைத் தொட்டிருக்கும் திரைப்படக் கலையின் வரலாற்றைப் பேசும் புத்தகம் இது. சலனப்படம் உருவான வரலாறு முதல் அதை வளர்த்தெடுத்த கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என்று திரைக்கலை தொடர்பான பல்வேறு விஷயங்களைப் பதிவுசெய்திருக்கிறார் நூலாசிரியர் ஜாக் சி.எல்லீஸ். பல புகழ்பெற்ற திரைப்படக் காட்சிகளின் படங்களும் உண்டு. திரை ஆர்வலர்களுக்குப் பொக்கிஷம்!
Be the first to rate this book.