(‘ஆனந்த விகடன்’ வாசகர்களுக்காக வாரந்தோறும் ஒவ்வொரு விஷயத்தைப் பரிந்துரைக்கிறார்கள் பிரபலங்கள். இந்த வாரம் எஸ்.ராமகிருஷ்ணன்...)
வரலாறு யாரால், யாருக்காக, எவ்வாறு எழுதப்படுகிறது என்ற கேள்வி முதன்மையானது. பெரும்பான்மையான இந்திய வரலாற்று நூல்கள், வெளிநாட்டவரால் எழுதப்பட்டவை. அதுவும் நம்மை ஆட்சிசெய்த ஆங்கிலேயர்களால் எழுதப்பட்டவை. அவற்றில் பெரும்பாலும் உண்மை மறைக்கப்பட்டுள்ளது.
வரலாறு என்பதை நாம், மன்னர்களின் வெற்றிச் சரித்திரமாக மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது தவறான எண்ணம். மக்களின் வாழ்க்கையும், பண்பாட்டு மாற்றங்களும், பொருளாதார வளர்ச்சியும் சேர்ந்ததுதான் முழுமையான வரலாறு. நிலப்பரப்பளவில் ஒப்பிட, இந்தியா சிறிய தேசமாக இருக்கலாம். ஆனால் பண்பாட்டில் உலகுக்கே வழிகாட்டும் நாடு என்பேன்.
இந்திய வரலாற்றை நாம் பாடப்புத்தகங்களின் வழியேதான் தெரிந்துகொள்ளத் தொடங்குகிறோம். அதுவும் பள்ளி வயதோடு முடிந்துபோகிறது. கலைக் கல்லூரியில் வரலாறு படிப்பவர்கள், கூடுதலாக அறிந்து கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு, பொது நூல்களில் இருந்தும், சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், ஊடகச் செய்திகளிலிருந்துமே வரலாறு அறிமுகமாகிறது. நாம் அறிந்துவைத்துள்ள வரலாற்றில் எழுபது சதவிகிதம் பொய்யே.
யாரோ ஒருவரின் கற்பனை உருவாக்கிய கதைகளே, இன்று `வரலாறு’ என நம்பவைக்கப்படுகிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் விருப்பத்துக்கேற்ப வரலாற்றை மாற்ற முனைகிறார்கள். பொய்களை உண்மையாக்க முனைகிறார்கள். ஆனால், வரலாற்று உண்மைகளை எவரும் புதைத்துவிட முடியாது என்பதே காலம் காட்டும் உண்மை.
அரசின் முக்கிய உத்தரவுகளை, கொடைகளை, செய்திகளைக் கல்வெட்டுகளாக அச்சிட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வைப்பது, அசோகன் காலத்தில் தொடங்கி இன்று வரை தொடர்ந்துவருகிறது. மொகலாயர்கள் காலத்திலிருந்தே முறையான ஆவணப்படுத்துதல் தொடங்கியிருக்கிறது. சோழ மன்னர்கள் தங்கள் அரசாட்சியின்போது நடந்த முக்கிய விஷயங்களை, தானங்களை, நிர்வாக முறைகளைக் கல்வெட்டாக்கி வைத்திருக்கிறார்கள்.
சிந்து சமவெளி நாகரிகத்தின் அடையாளமான மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகியவை முறையாக ஆய்வுசெய்யப்பட்டுள்ளபோதும் அங்கு என்ன மொழி பேசப்பட்டது, எந்த இனத்தவர் வாழ்ந்தார்கள் என்பது இன்றும் தீர்மானிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது.
இந்திய வரலாற்றை அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் டி.டி.கோசாம்பி, டி.என்.ஜா, இர்ஃபான் ஹபீப், மஜும்தார், ராய் சௌத்ரி, ஏ.எல்.பஷாம், ஆர்.எஸ்.சர்மா, ராபர்ட் சீவல், ரொமிலா தாப்பர், சதீஷ் சந்திரா, ராமச்சந்திர குஹா ஆகியோரின் நூல்களை வாசிக்கலாம். குறிப்பாக,
1) டி.டி.கோசாம்பி எழுதிய `இந்திய வரலாறு’,
2) ஏ.எல்.பஷாம் எழுதிய `வியத்தகு இந்தியா’,
3) ரொமிலா தாப்பர் எழுதிய `முற்கால இந்தியா’,
4) ராமச்சந்திர குஹா எழுதிய `காந்திக்குப் பிறகு’,
5) வில்லியம் டேல்ரிம்பிள் எழுதிய `கடைசி மொகலாயன்’,
6) `பேரரசன் அசோகன்’ - சார்லஸ் ஆலென்,
7) `ஏழு நதிகளின் நாடு’ - சஞ்சீவ் சன்யால்,
8) `மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள்’,
9) பிபன் சந்திரா எழுதிய `சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா’,
10) சுனிதி குமார் கோஷ் `இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும்’ இரண்டு தொகுதிகளை
வாசிக்கலாம்.
அதுபோலவே தமிழக வரலாற்றை வாசிக்க விரும்புகிறவர்கள்,
1) டாக்டர் மா. இராசமாணிக்கனார் எழுதிய `தமிழக வரலாறு’,
2) ஆர். சத்தியநாதய்யர் எழுதிய `மதுரை நாயக்கர் வரலாறு’,
3)மா. இராசமாணிக்கனார் எழுதிய `பல்லவர் வரலாறு’,
4) மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய `களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’,
5) கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதிய `சோழர்கள்’,
6) மீ.மனோகரன் எழுதிய `மருதுபாண்டிய மன்னர்கள்’,
7) ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய `ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்’,
8) ர.விஜயலட்சுமி எழுதிய `தமிழகத்தில் ஆசீவகர்கள்’,
9) ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய `சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’
போன்றவற்றை வாசிக்கலாம்.
10) குழந்தைகளுக்கு வரலாற்றை அறிமுகப்படுத்த, த.வெ.பத்மா எழுதிய `கனவினைப் பின்தொடர்ந்து’ என்ற சிறிய நூல் சிந்துசமவெளிப் பண்பாடு குறித்துச் சிறப்பான அறிமுகத்தைத் தரக்கூடியது.
நன்றி: ஆனந்த விகடன்