உலகப் பயணியர் பட்டியலில் பிரெஞ்சு நாட்டுப் பயணியான பெர்னியருக்கு முக்கியமான இடமிருக்கிறது. மிகச்சிறிய வயதிலேயே பெற்றோரை இழந்தவர். சொந்தக்கார் ஒருவரின் ஆதரவில் வளர்ந்து பள்ளிக்கல்வியை முடித்தார். பிறகு சொந்த முயற்சியில் பெர்னியர் மருத்துவம் படித்தவர். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் இந்தப் படிப்பும் பயிற்சியும் அவருக்கு மிகவும் துணையாக இருந்திருக்கிறது. அவர் படைவீரரோ அல்லது நாடுபிடிக்கும் லட்சியத்தால் உந்தப்பட்டவரோ அல்ல. பலவிதமான மனிதர் களைப் பார்க்கும் ஆர்வமும் பலவிதமான நிலவியல் சூழல்களைக் காண்கிற வேகமும்தான் அவரைச் செலுத்திய சக்திகள்.
தற்செயலாக ஒரு நண்பரின் மூலம் போலந்து நாட்டுக்குச் சென்ற தூதர் ஒருவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். அவரோடு சேர்ந்து பெர்னியர் மேற்கொண்ட பயணங்கள் ஏராளம். இருபதுகளை யொட்டிய வயதில் பிறந்த நாட்டைவிட்டு உலகத்தில் திரிந்தலையத் தொடங்கிய அவருடைய பயணம் 68ஆவது வயதில் அவர் மறையும்வரை தொடர்ந்தது. வடக்கு ஜெர்மனி, போலந்து, சுவிட்சர்லாந்து, இத்தாலி, எகிப்து ஆகிய நாடுகளில் பத்தாண்டு களுக்கும் மேலாகச் சுற்றியலைந்திருக்கிறார்.
பிறகு அவர் தன் முப்பத்தோராம் வயதில் இந்தியாவுக்கு வந்தார். டேனிஷ் மெண்ட்கான் என்பவருடைய நண்பராகவும் மருத்துவராகவும் விளங்கினார். அவர் வழியாக ஷாஜஹானுடனும் அவருடைய பிள்ளைகளுடனும் நேரில் பார்த்துப் பேசிப் பழகும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறார். ஷாஜஹானால் தக்காணப்பகுதியைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பதிகாரியாக ஔரங்கசீப் நியமிக்கப்பட்ட காலத்திலிருந்து, மெல்லமெல்ல ஔரங்கசீப்பின் கை வலிமை யடைந்து தன்னை ஒரு பேரரசராக அவர் நிறுவிக்கொள்ளும் காலம்வரைக்கும்- ஏறத்தாழ பன்னிரண்டாண்டுகள்- இந்தியாவில் மொகலாயர் ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் எல்லா இடங்களிலும் சுற்றியலைந்திருக்கிறார். ப
ன்னிரண்டு ஆண்டுகால அனுபவம் அரச குடும்பத்தவரின் நடவடிக்கைகளையும், சமூகத்தில் நடை பெற்ற சம்பவங்களையும் நெருக்கமாக இருந்து கவனிக்கக்கூடிய ஒரு வாய்ப்பை அவருக்கு வழங்கியிருக்கிறது. அந்த வாய்ப்பை அவர் முழுஅளவில் பயன்படுத்திக்கொண்டார் என்றே தோன்றுகிறது. அதற்கு அவர் எழுதிச் சென்றுள்ள பயணக் குறிப்புகளே சாட்சி. பெர்னியரின் குறிப்புகளைப் படித்த டிரைடன் என்னும் நாடக ஆசிரியர், அவை கொடுத்த ஊக்கத்தாலும் உத்வேகத்தாலும் ‘ஔரங்கசீப்பின் சோகக்கதை’ என்னும் நாடகத்தை எழுதி அரங்கேற்றினார் என்பது ஒரு வரலாற்றுச் செய்தி. பெர்னியரின் குறிப்புகளில் பொதிந்துள்ள படைப் பூக்கத்துக்கு இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு.
- பாவண்ணன்
Be the first to rate this book.