புகழ் பெற்ற ஒரு நூலாசிரியர், போர்முனைச் செய்திகளைச் சேகரிக்கின்ற ஒரு பத்திரிகையாளராக வேலை பார்த்து வரும் தன்னுடைய மனைவி திடீரென்று ஒரு நாள் எந்தச் சுவடுமின்றித் தன்னுடைய வாழ்க்கையிலிருந்து மாயமாய் மறைந்துவிடுவதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். காலம் அவருக்கு அதிக வெற்றிகளையும் ஒரு புதிய காதலையும் கொண்டுவருகின்றபோதிலும், அவர் தொடர்ந்து குழப்பத்தில் இருக்கிறார், அதே நேரத்தில், அந்த மர்மத்தால் அவர் அதிகமாக ஆட்கொள்ளப்படுகிறார். ‘யாரேனும் அவளைக் கடத்திச் சென்றுவிட்டனரா? அவள் மிரட்டப்பட்டாளா? அல்லது, என்னுடனான மணவாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டு அவள் தானாகவே எங்கோ போய்விட்டாளா?’ என்றெல்லாம் எண்ணி அவர் தவிக்கிறார். அவளால் ஏற்பட்டுள்ள இந்த மனக் கொந்தளிப்பு, அவளுடைய வசீகரத்தைப்போலவே வலிமையானதாக இருக்கிறது.
அவளைக் குறித்தும், அதன் மூலமாகத் தன்னுடைய சொந்த வாழ்வின் உண்மை குறித்தும் அவர் மேற்கொள்கின்ற தேடல், அவரை பிரான்ஸிலிருந்து ஸ்பெயினுக்கும், குரோயேசியாவுக்கும், இறுதியில், மத்திய ஆசியாவின் அழகான ஸ்டெப்பி புல்வெளிப் பகுதிக்கும் அழைத்துச் செல்கிறது. அதைவிட முக்கியமாக, அது அவரை அவருடைய பாதுகாப்பான உலகிலிருந்து இடம் பெயர்த்து, அன்பின் இயல்பையும் தலைவிதியின் சக்தியையும் பற்றிய ஒரு புதிய புரிதல் குறித்தத் தேடலுக்கான, முற்றிலும் பரிச்சயமற்ற ஒரு பாதைக்கு இட்டுச் செல்கிறது.
இந்நூலின் வாயிலாக, பாலோ கொயலோ, படிப்போரின் மனங்களை வசீகரித்துக் கட்டிப் போடும் விதத்தில் கதை சொல்வதற்கான தன்னுடைய ஆற்றலை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சாத்தியக்கூறுகள் நிறைந்த ஓர் உலகில் ஒரு மனிதனாக இருப்பது என்றால் என்ன என்பது குறித்தத் தன்னுடைய அசாதாரணமான, ஆழமான உள்நோக்கையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
நம்முடைய காலகட்டத்தைச் சேர்ந்த, மிகுந்த தாக்கம் விளைவித்துள்ள எழுத்தாளர்களில் ஒருவரான பாலோ கொயலோ, 1947ல் பிரேசிலில் ரியோ டி ஜெனிரோ நகரில் பிறந்தார். விற்பனையில் உலகச் சாதனைகளைப் படைத்துள்ள பல நூல்களை அவர் எழுதியுள்ளார். அவருடைய நூல்கள் 83 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, 170க்கும் அதிகமான நாடுகளில் சுமார் 32 கோடிப் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. ‘பிரேசிலியன் அகாடமி ஆஃப் லெட்டர்ஸ்’ அமைப்பின் ஓர் உறுப்பினரான அவர், செவாலியே விருது பெற்றவர். 2007ல், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதித் தூதராக அவர் நியமிக்கப்பட்டார். பாலோ கொயலோவின் தலைசிறந்த நூலான ‘ரசவாதி’ மற்றும் ‘வில்லாளன்’ ஆகிய நூல்கள் ஏற்கனவே மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் வெளியீட்டில் தமிழில் வெளிவந்துள்ளன.
Be the first to rate this book.