என் முன்னாள் காதலி அர்ச்சனா, “என்னை ரொம்பப் பிடிக்குமா?உன் ஒய்ஃப ரொம்பப் பிடிக்குமா?” என்றாள். லேசாக சிரித்த நான், “எனக்கு… ஜெயமோகனையும் பிடிக்கும். சாருநிவேதிதாவையும் பிடிக்கும்” என்று கூற… அவள் குழந்தை போல் அப்பாவித்தனமாக கண்களை வைத்துக்கொண்டு, “யாரு அவங்கள்லாம்?” என்று அழகாக கேட்டபோது, எனக்கு ஜெயமோகனையும், சாருநிவேதிதாவையும் விட அர்ச்சனாவை அவ்வளவு பிடித்துப்போயிற்று.
***
விவேக் ஒரு முறை உஷா பற்றி, “உயிருள்ள வரை உஷா அல்ல. உயிர் போன பின்பும் உஷா…” என்று கவிதை எழுதி, அதை உஷாவிடமே காண்பிக்க… அவள், “யார் உயிர் போன பின்பு? என்று கேட்க… விவேக்குக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஓடி வந்துவிட்டான். ஒரு நாள் நடுராத்திரி, தெருவில் கட்டில் போட்டுத் தூங்கிக்கொண்டிருந்த என்னை எழுப்பி,. “சந்தியா… நீதான் என் இந்தியா” என்று கூறிய கவிதைக்காக இன்று வரையிலும் நான் அவனை மன்னிக்கவேயில்லை.
***
1980களின் தாவணிப் பெண்கள் கொஞ்சம் சுஜாதா, பாலகுமாரன் எல்லாம் படித்தவுடனேயே, தங்களை அறிவுஜீவியாக நினைத்துக்கொள்வார்கள். அப்போது அவர்களின் தலைக்குப் பின்னால் மங்கலாக ஒரு ஒளிவட்டம் தோன்றும். இந்த ஒளிவட்டத்தின் பிரச்சனை என்னவென்றால், அது வேறு யார் கண்ணுக்கும் தெரியாது. எனவே அவர்கள் தங்கள் ஒளி வட்டம் கண்ணுக்குத் தெரியும் ஆளைத் தேடிக்கொண்டேயிருப்பார்கள். நான் எப்போதும் அழகிய பெண்களின் ஒளிவட்டங்களை அங்கீகரிப்பவன் என்பதால், விஜி சமீபகாலமாக என்னோடு பேச ஆரம்பித்திருக்கிறாள்.
***
அழகிகள் தாங்கள் மேலும் அழகாக தோற்றமளிக்கவேண்டும் என்று நினைக்கும்போது, தங்கள் நெற்றிமுடியை மேல்நோக்கி ஒதுக்கிக்கொள்வார்கள்.
Be the first to rate this book.