ஒரு நாள் சுஜாதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூ.வி_யில் அவர் எழுத்து இன்னமும் இடம் பெறாதது பற்றிப் பேச்சு திரும்பியது. ‘‘ஜூ.வி_யில் தொடர்கதைகள் வெளியிடுவதில்லை என்பதால், வேறு மாதிரி சிந்தித்துச் செயல்படலாம். எனக்கும் புது அனுபவமாக இருக்கும்’’ என்றார் சுஜாதா. பிறகு பல ஐடியாக்கள் பற்றிப் பேசியதில் விஞ்ஞானம் பற்றி ஒரு தொடர் ஆரம்பிக்கலாம் என்று முடிவானது. அதுவே கேள்வி-பதிலாக உருவெடுத்தது! வாசகர்களின் விஞ்ஞானக் கேள்விகளுக்கு இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பதில் அளித்தார் சுஜாதா. ஜூ.வி-க்கு பிரத்தியேக அணிகலனாக விளங்கியது இந்தப் பகுதி.
‘‘ஒவ்வொரு வாரமும் இந்தப் பகுதிக்காக குறித்த நேரத்தை ஒதுக்கி எத்தனையோ புத்தகங்களைப் படிக்க நேர்ந்தது! லைப்ரரிக்குப் பல முறை செல்ல வேண்டி வந்தது. சம்பந்தப்பட்ட அறிஞர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது’’ என்று சுஜாதாவின் தனி ‘டச்’, நுட்பமான விஷயங்களை எளிதில் புரியவைத்த எழுத்துத் திறமை ஆகியவையும் சேர்ந்துகொண்டதால் ஜூ.வி-யின் பல லட்சக்கணக்கான வாசகர்களும் ஆர்வத்தோடு இந்தப் பகுதியைப் படித்து ரசித்தார்கள். இந்தக் கேள்வி-பதில் பகுதியைத் தொகுத்து ஆங்கில புத்தகங்களுக்கு இணையாக மிகச் சிறப்பான முறையில் புத்தகமாகக் கொண்டு வர வேண்டும் என்ற என் எண்ணத்துக்கு வண்ணம் கொடுத்து விசேஷமான விளக்கப் படங்களைத் தேடித் தேடி எடுத்து இந்தப் புத்தகத்துக்கு உருவம் கொடுத்த அசகாய சாதனையைச் செய்தவர் என் மதிப்புக்குரிய மதன். அவருக்கும் புத்தகத்துக்குக் கம்பீரமான அமைப்பை ஏற்படுத்தித் தந்த மணியம் செல்வனுக்கும் என் தனிப் பாராட்டுகள்!
தமிழ் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் புத்தகத்தின் ஐந்தாவது பதிப்பில், ‘ஜூனியர் போஸ்ட்’ பத்திரிகையில் சுஜாதா எழுதிய ‘அதிசய உலகம்’ கேள்வி _ பதில்களையும் தேர்ந்தெடுத்து இணைத்து புதிய பொலிவுடன் சமர்ப்பிப்பதில் பெருமைப்படுகிறேன்.
Be the first to rate this book.