தமிழில் இன்று எழுதிவரும் எழுத்தாளர்களில் ஆகப் பெரிய கதை சொல்லி யுவன் சந்திரசேகர்தான். அதி நவீனக் கதைசொல்லி. அவருடைய கதைகளை என்னால் ஒருபோதும் சொற்களாக வாசிக்க முடிந்ததில்லை. ஒலியலகுகளாகவே வாசிக்கிறேன். கண்களால் புரட்டிச் செல்லும்போதும் அந்தப் பிரதி காதுகளால் கிரகிக்கப்பட்டுப் புரிந்துகொள்ளப்படுகிறது. இதற்கு நேர் மாறானவை யுவனின் கவிதைகள். அவை உரத்த குரல் வாசிப்புக்கு இணங்காதவை. யுவன் சந்திரசேகர் ஒருபோதும் ஒற்றைக் கதையைச் சொல்வதில்லை. கதைகளின் கூட்டணியைத்தான் முன்வைக்கிறார். ஒரு கதைக்குள் சொருகப்பட்ட இன்னொரு கதையும் அதற்குள் வேறொரு கதையும் அவற்றின் உள்ளே மற்றொரு கதையும் பிறிதொரு கதையுமாகச் சொல்லிச் செல்வது அவரது பாணி; எல்லா அனுபவங்களையும் கதைகளின் கதைகளாகவே பார்ப்பதே அவரது கதையாளுமை. முடிவடையக்கூடிய ஒரு கதையையோ அல்லது தொடக்கம் உச்சம் இறுதிச் சமநிலை என்ற மரபான கதையையோ யுவன் சந்திரசேகரால் ஒருபோதும் எழுத, யோசிக்கவே கூட முடியாது என்று எண்ணுகிறேன். இந்த அவதானிப்புகளின் அண்மைய உதாரணம் 12 கதைகள் கொண்ட இத்தொகுப்பு. அவரது முந்தைய கதைகள் கதை சொல்லிக்குக் கட்டுப்பட்டு ஒலித்தவை. இந்தத் தொகுப்பின் கதைகள் சற்று அதிகத் தன்னிச்சையுடன் சஞ்சரிப்பவை.
Be the first to rate this book.