“நான் இமய முகடுகளில் பலமுறை ஏறிச்சென்றதுண்டு. அங்கு மிக உயரத்தில் பனி பாறை போல உறைந்திருக்கும். அதைத் தொட்டால் பனி மெல்ல உருகி பள்ளம் ஏற்படுகிறது. அதன் வழியாக நீர் துளித்துளியாக வழிகிறது. பாறை விரிசலிடுகிறது. உடைந்து சிறு ஓடையாக வழிகிறது. அது பெரிய நீரோடையாகலாம். அப்போது நீர்சுழிக்கும் ஒலி ஏற்படுகிறது. ஓடை சிறு வெள்ளாடு போல தாண்டிக் குதிக்கிறது. அது கங்கையாகலாம். மந்தாகினியாக நடைபோடலாம். ருத்ர பிரயாகைக்கு வரும்போது பெயருக்கு ஏற்ப ரெளத்ர பிரவாகம்தான். காதுகளை உடைக்கும் பேரோசை. பிறகு ரிஷிகேசம். நீர் மலினமடைகிறது. காசியில் அதில் சகல பாவங்களும் கலக்கின்றன. கல்கத்தாவில் கங்கை கடல் போலிருக்கும். மறுகரை தெரியாது. அதன்மீது கப்பல்கள் நகரும். கடலும் கங்கையும் ஒன்றாகுமிடம் எவருக்கும் தெரியாது. ஆயிரம் ஒலிகள் அதன்மீது ஒலிக்கும். ஆனால் கங்கையும் கடலும் பேரமைதியில் மூழ்கியிருப்பதாகப்படும். பனிப்பாறையின் அதே அமைதி.
நம் பனிப்பாறையை அனுபவமெனும் விரல் தீண்டும்போதுதான் விழிப்பு ஏற்படுகிறது. தீண்டப்படாத பனிப்பாறைகள் ஒருவேளை யுக யுகங்களாக அங்கேயே, யார் பார்வையும் படாத உயரத்தில், அப்படியே இருந்து கொண்டிருக்கக்கூடும். பெரும் செவ்விலக்கியங்கள் மெளனமானவை. அவை ஒரு மனதின் வெளிப்பாடுகளல்ல, பல்லாயிரம் வருடங்களாக உறைந்து கிடந்த ஒன்று உயிர் பெற்றெழுவது ஆகும். மனம் என்பது ஒரு தனிமனித அமைப்பல்ல. ஒரு பெரும் பொதுமை அது. காலாதீதமானது.
தூலங்களில் மட்டும் ஈடுபட்டு ஆழ்ந்த அனுபவங்களை மறந்துபோன ஒரு தலைமுறையினர் நாம். துரியத்தின் தளத்தை நமது படைப்புலகில் நாம் அடைய முடியாது போகலாம்; காரணத்தின் தளத்தை தொடமுடியாது போகலாம்; குறைந்தபட்சம் பிரபஞ்ச சாரத்தின் ஒளி பரவிய கனவின் தளத்தையாவது தொட்டறிய முயல்வோம்.”
- நித்ய சைதன்ய யதி
Be the first to rate this book.