கடலோர மக்கள் வாழ்விலிருந்து பெற்ற பூர்வீக அறிவை அழித்து அதன் மேல் இறுகியதும் சுரண்டல் குணம் கொண்டதுமான பண்பாட்டைக் கட்ட மத நிறுவனங்கள் முயல்கின்றன. இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து தப்பி, தனது முன்னோர் மரபைக் கண்டுவிடத் துடிக்கும் சிறுவனின் தேடல், அவனுடைய முதுமையிலும் அயராமல் தொடர்கிறது. முன்னோர்களைப் புனிதர்களாகவும் யேசு என்ற இறை மகனைத் தன்னைப் போன்ற எளிய மனிதனாகவும் சர்வேசுவரனாகவும் அவன் இனங்காண்கிறான். இதுவே நாவலின் மைய இழை. கடலோர வாழ்விலும் பண்பாட்டிலும் மொழியிலும் மூடுண்டு கிடக்கும் தொன்மங்களின் எச்சங்களை விளங்கிக்கொண்டு மறுவாசிப்புச் செய்கிறது நாவல். மத, வணிக நிறுவனங்களால் சுரண்டப்படும் மக்களின் மீதான அக்கறையாகவும் கரிசனமாகவும் நாவல் தன்னை வளர்த்துக்கொள்கிறது. ஜோ டி குருஸின் சீர் அமைதிகொண்ட மொழிநடை கடலோர நிலவியலுக்குப் புதிய வண்ணத்தைச் சேர்த்துவிடுகிறது. யாத்திரை என்பதை நிறுவனமயமான ஆன்மீகத்துடன் இணைத்தே புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் சூழலில் இந்த ‘யாத்திரை’ கடலோர நாட்டார் தொன்மரபின் அழியாத் தடங்களை கண்டெடுத்துக் காட்டுகிறது.
Be the first to rate this book.