அரசியல், ஒவ்வொரு குடிமகனின் அன்றாட நிகழ்வில் நேரடியாகவோ மறைமுகமாகவோ கலந்திருக்கிறது. அப்படிப்பட்ட அரசியல் தூய்மையானதாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். மக்களுக்குப் பணி செய்ய உருவாக்கப்பட்ட அரசியலை, சுயநலத்துக்கும் சுகபோகத்துக்கும் பயன்படுத்திக்கொள்ளும் பரிதாப நிலைதான் இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலும் நிலவுகிறது. ஒவ்வொருவரும் சுயமரியாதையோடு இருக்கவேண்டும் என மூச்சு பிரியும் வரை தொண்டாற்றிய பெரியார் நினைத்திருந்தால் அரசியல்வாதியாகி லாபம் அடைந்திருக்கலாம்.
ஆனால், அவர் இயக்கவாதியாகவே வாழ்நாள் முழுதும் வாழ்ந்து காட்டினார். பெரியாரையும் ‘திராவிட’ என்ற அடையாளத்தையும் வைத்துக்கொண்டுதான் தமிழ்நாட்டில் பெரும்பாலான கட்சிகள் இருக்கின்றன, தோன்றுகின்றன. ஆனால், அந்தக் கட்சியினர் பெரியார் பெயரையும் அவர் படத்தையும் பயன்படுத்துவதோடு மட்டும் நிறுத்திவிடுகிறார்கள். பொது வாழ்வில் பெரியாரைப் போல தூய்மைத் தொண்டாற்றும் எண்ணம் அவர்களுக்கு இல்லை. அரசியல் லாபத்துக்காக தடம்மாறும் அரசியல்வாதிகள், தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறுபவர்கள்... என அனைத்து அரசியல் கட்சியினரின் செயல்பாடுகளை விமர்சித்து ஆனந்த விகடனிலும் ஜூனியர் விகடனிலும் நூலாசிரியர் ப.திருமாவேலன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது.
சோனியா காந்தி, மோடி, ராகுல் காந்தி போன்ற தேசியக் கட்சிகளின் தலைவர்கள்; கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ்... என மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் ஒருவரும் தப்பவில்லை - இவரின் விமர்சனக் கணைகளுக்கு! ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என சிலப்பதிகாரம் சுட்டுவதைப்போல, அறம் தவறி அரசியல் செய்பவர்களின் மனச்சாட்சியை உலுக்கி கேள்வி எழுப்பும் கட்டுரைகள் இவை. ‘போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும். ஏற்றதோர் கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன், அஞ்சேன்’ - கவியரசு கண்ணதாசனின் இந்தக் கருத்துவழி நின்று, அரசியல் போர்வையில் அடாத செயல்புரிபவர்களின் முகத்திரையைக் கிழித்து, அவர்களின் சுயநல சந்தர்ப்பவாதங்களை உலகுக்கு உணர்த்தும் அரசியல் ஆவணமாகத் திகழ்கிறது இந்த நூல்!
Be the first to rate this book.