சர்வதேச உறவுகள், புவிசார் அரசியல், கொள்கை வகுப்பு, ராஜ தந்திரம், உலக வரலாறு, அரசியல் சிந்தனை வரலாறு, பொருளாதார வரலாறு, அரசியல் சித்தாந்தம் போன்ற துறை ரீதியான அறிவின் மூலமாக ஈழ அரசியலை ஆய்வு செய்து எழுதப்பட்ட புத்தகம் இது. அதாவது காலனி ஆதிக்கம் முதல் இன்று வரை நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் அனைத்தும் ஈழத் தமிழனது இடுப்பை ஒடிப்பதற்காக எப்படிப்பட்ட வார்த்தை ஜாலங்களுடன் உருவாக்கப்பட்டன என்ற வரலாற்று நகர்வுகளுடன் இந்த நூல் பயணிக்கிறது.
சிங்கள இனவாதம் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு காரணமா? விடுதலைப் புலிகளை ஒடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் எண்ணம் மட்டுமே காரணமா? கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்தியாவுக்குப் பக்கத்தில் இலங்கை இருப்பதுதான் காரணமா?... என்றால் மூன்றுமேதான். இவை அனைத்தும் இதுவரை பேசப்பட்டன. ஆனால், மு.திருநாவுக்கரசு அதைத் தாண்டிய ஒரு காரணத்தைச் சொல்கிறார். சிங்கள - பெளத்தர்களுக்கும் இந்தியாவுக்கும் தொடர்ச்சியாக இருக்கும் பகைமைதான் இதற்குக் காரணம் என்கிறார்.
‘‘சிங்கள பெளத்தர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள வரலாற்றுப் பகைமையை முதலீடாக்கி அதன் மூலம் இலங்கையின் நவீன வரலாற்றில் சிங்கள பெளத்தர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பகைமையைத் தூண்டி வளர்த்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையில் இந்தியாவுக்கு எதிரான தமது கேந்திர நலன்களை அடைவதில் பிரித்தானியர் வெற்றி பெற்றனர். இந்த அரசியல் சதியில் சிங்களவரை தம் பக்கம் வென்றெடுப்பதற்காக தமிழரைப் பலியிடும் அரசியல் யாப்பு மரபை பிரித்தானியர் இலங்கையில் தோற்றுவித்தனர். பிரித்தானியர் சட்ட பூர்வமாகத் தோற்றுவித்த அந்த அழிவுப் பாதையின் தொடர் வளர்ச்சியே இன்றைய வரையான அரசியல் யாப்புகளாகும்” என்ற உண்மை அடித்தளத்தை வெளியில் கொண்டு வந்து போடுகிறது இந்தப் புத்தகம்.
- புத்தகன்
Be the first to rate this book.