நூறு முறை சொன்ன உதாரணத்தை மீண்டும் சொல்கிறேன். எம்.கே.டி. பாகவதர்தான் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார். கொலைக் கேஸில் ஜெயிலுக்குப் போய் வந்தார். புகழும் போனது. பணமும் போனது. கண் பார்வையும் போய் விட்டது. ஒரு காலத்தில் அவர் பாட்டைக் கேட்க மரக்கிளைகளிலும் விளக்குக் கம்பங்களிலும் நிற்பார்கள் மக்கள். அப்படி நின்று மின் அதிர்ச்சியில் செத்திருக்கிறார்கள். அவர் வந்தால் சமையலை அப்படியே போட்டு விட்டு ஓடுவார்களாம் பெண்கள். அப்பேர்ப்பட்டவர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கண் பார்வை இல்லாமல் உட்கார்ந்திருந்த போது யாரோ பிச்சைக்காரன் என்று நினைத்து ஒருவர் காசு போட்டிருக்கிறார். கருங்கல் தரையில் விழுந்த அந்த நாணயத்தின் ‘ணங்’ என்ற சப்தம் பற்றி மனம் குமுறி அழுதிருக்கிறார் எம்.கே.டி. என் காதிலும் அந்த ‘ணங்’ என்ற சப்தம் என் ஆயுள் உள்ளளவும் கேட்டுக் கொண்டே இருக்கும். நடிப்பினால் வரும் புகழ் அப்படித்தான் முடிவுறும். அப்படிப்பட்ட தொழிலின் மீதா நான் ஆசைப்படுவேன்?
Be the first to rate this book.