என்னை பேட்டி காண வந்தவர்கள் மூன்று ரகம். நீ சாதித்தது ஒன்றுமில்லை, நீ எழுதுவதெல்லாம் குப்பை; துப்பறியும் செக்ஸ் கதைகள்தாம் என்று என்னைச் சீண்டிவிட்டு நான் ஏதாவது கெட்ட வார்த்தை உபயோகிக்கிறேனா என்று காத்திருக்கும் ரகம் ஒன்று. இரண்டாவது ரகம், தகவல் ரகம். நான் பிறந்த தேதி, வயது, என்ன நிறம் பிடிக்கும், என்ன தைலம், இந்த ரகம்! மூன்றாவது, அறிவுஜீவிகள். மார்க்ஸீஸம், எக்ஸிஸ்டென்ஷியலிஸம், சமுதாயப் பார்வை போன்ற வார்த்தைகள் அடிக்கடி புழங்கும் (இங்கிலீஷ் வார்த்தை அடைப்புக்குள் நிறையவே வரும்). மூன்று ரகங்களுக்கும் உதாரணங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன).
நான், சினிமா நடிகர்களைச் சந்தித்த பேட்டிகள் சிலவும் இதில் உண்டு...
தவிரவும், இந்தப் புத்தகத்தில் நானே எழுதிய கட்டுரைகள் சிலவும் உள்ளன. விளையாட்டு, நகைச்சுவை, புத்தக விமர்சனம், சினிமா விமர்சனம் போன்றவை பல்வேறு தருணங்களில் எழுதியவை. ஒரு கட்டுரை ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்ப்பு.
இந்தப் புத்தகத்தை ஒட்டு மொத்தமாகப் படித்தால் கிடைக்கிற வடிவம் என் நிஜவாழ்வின் வடிவத்தை விட கொஞ்சம் பெரிசானது; இது நானல்ல, அவ்வப்போது நான்.
- சுஜாதா
Be the first to rate this book.