இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் இன்றைய சூழல், சமூக நிலை; நம்பிக்கைகள், விழுமியங்கள், மதிப்பீடுகள், பண்பாடு; பாவம், புண்ணியம், புனிதம்; விசுவாசம், துரோகம்; அதிகாரம், அடிமைத்தனம், அரசியல்; அர்ப்பணிப்பு, புறக்கணிப்பு, பலியிடல், பழிவாங்கல் என அனைத்துக் கூறுகள் மீதும் விசாரணை நடத்தி வினாக்களை எழுப்புகின்றன. வினாக்களுக்கான விடைகள் மிக எளிமையானவை. ஆனால்... அவை ஒவ்வொருவருக்கும் வெவ்வேறானவை. ஏன் அப்படி? இந்த வினாவிற்கும்கூட அனைவருக்குமான ஒற்றை விடை சாத்தியமில்லை.
90-களின் தொடக்கம் முதலே எழுதி வந்தாலும் மதிகண்ணனின் எழுத்துகள் தொகுப்பாக்கப்பட்டது மிகவும் தாமதமாகத்தான். 2005-இல் வெளியான ‘அ-நிக்ரகம்’ என்ற சிறுகதைத் தொகுப்பு தொடங்கி இன்றுவரை ஏழு தொகுப்புகள் வெளியாகியுள்ளன. எட்டாவது நூலாக வெளியாகும் ‘விரிவாக்கப்பகுதி’ எனும் இந்நூல் நான்காவது சிறுகதைத் தொகுப்பாகும். இதில் பழைய கதை சொல்லல் முறையில் நவீன வாழ்வின் சிக்கல்களை விசாரணைக்குட்படுத்தும் கூறுகள் முன்நிலைப்படுத்தப்பட்டுள்ளன.
கதைகளைத் தாண்டியும் கதைகளின் பின்னொட்டான கேள்விகள் மிகவும் காத்திரமானவை. அந்தக் கேள்விகள் வாசிப்பவர்களை கொஞ்சமாவது அசைத்துப் பார்க்கும்.
Be the first to rate this book.