குழந்தைகள் உலகம் அறம் சார்ந்தது. குழந்தைகளுக்கு பொய் பிடிக்காது. உண்மை கசக்காது. உறவுகள் பகைக்காது. இந்த உலகத்தில் எல்லாமே அற்புதம்தான். குழந்தை இலக்கியமும் அப்படித்தான்... `சிறுவர் இலக்கியம் வாசிக்கும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைத் தரவேண்டும். இன்பமளிக்க வேண்டும். ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். ஆச்சரியப்படுத்த வேண்டும். அவர்களின் படைப்பூக்கத்தைத் துலங்க வைக்க வேண்டும். விந்தையும் விசித்திரமான உலகத்திற்குள் அழைத்துச் செல்லவேண்டும். அற்புத உணர்வுகளின் சிகரத்தில் நிற்க வைக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வைக்க வேண்டும். அன்பையும் நேசத்தையும் பாசத்தையும் வளர்க்க வேண்டும். மாயங்களின் உலகில் குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாட வேண்டும்.
அவர்கள் அறியாமல் அவர்கள் கதைகளின் வழியாக யதார்த்த உலகைப் புரிந்து கொள்கிறார்கள்' என்கிறார் நூலாசிரியர் உதயசங்கர். அற்புதத்தை சுமந்து செல்லும் மந்திர கம்பளமாய் சிறுவர் கதைகளை இந்நூலில் சுமந்து வருகிறார் எழுத்தாளர் உதயசங்கர். குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் படித்து குதூகலமடையும் வகையில் இந்நூலில் ஒன்பது உன்னதக்கதைகள் நவரத்தினங்களாக இடம்பெற்றுள்ளன. ஆனியின் பயணம் என்ற குறுநாவலும் இடம்பெற்றுள்ளது. கதைக்கேற்ற ஓவியங்கள் கதைமாந்தர்களை கண்முன் கொண்டு வருகின்றன. வாருங்கள் குழந்தைகள் உலகத்திற்குள் நுழைவோம். குதூகலத்துடன் கொண்டாடுவோம்.
Be the first to rate this book.