விண்வெளிப் பயணம் என்பது மனித குலச் சாதனை. புவி ஈர்ப்பு அற்ற நிலையில் மிதந்து, நடந்து, சில நாட்கள் விண்வெளியில் வாழ்வது இதற்கு அத்தியாவசியம். இந்த விண்வெளிப் பயணத்தில் பெண்களும் சாதனை புரிந்ததைப் பற்றியே இந்த நூல். இதில் ஆண்கள் சாதனை படைத்தது அதிசயமே அல்ல; ஆனால், பெண்கள் தங்கள் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, எட்டாத தூரத்தில் இருக்கும் சாத்தியங்களையும் எட்டிப் பிடித்து, ஆணுக்கு நிகராக சாதனை புரிந்தது சாதனையிலும் சாதனை; அதிசயத்திலும் அதிசயம்.
அப்படிப்பட்ட வீர சாகசங்கள் புரிந்த வீராங்கனைகளைப் பற்றிச் சுவையாக எழுதி இருக்கிறார் நூல் ஆசிரியர் பசுமைக்குமார். விண்வெளிக்குச் சென்ற முதல் பெண், அதிலேயே முதல் அமெரிக்கப் பெண், விண்வெளியில் நடந்த முதல் பெண், நடந்த முதல் அமெரிக்கப் பெண், விண்வெளிக்குச் சென்ற முதல் ஆசிரியை, முதல் அமெரிக்க யூத இனப் பெண், முதல் பிரிட்டிஷ் பெண், முதல் கருப்பு இனப் பெண், முதல் ஜப்பான் பெண், முதல் கனடா பெண், விண்வெளியில் அதிக காலம் பயணம் செய்த பெண்மணி, முதல் இந்தியப் பெண், 3 முறை பயணம் செய்த பெண், 606 முறை பூமியைச் சுற்றிய பெண், 5 மாதம் குடியிருந்த பெண்... என எத்தனையோ சாதனைப் பெண்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.
பெண்களின் பெருமையைத் தெரிந்துகொள்வதும், முன்னேறத் துடிக்கும் பெண்கள் தங்கள் உற்சாகத்தை வளர்த்துக்கொள்வதும், அணைந்துவிடாமல் காத்துக்கொள்வதும் மட்டும் அல்லாமல் ஆண்களும் தங்கள் முன்னேற்றத்துக்கும் பயன்படுத்தும் வகையில் இந்த நூல் வழிகாட்டும் என்பதில் ஐயம் இல்லை. விண்ணை அளந்துதான் பார்ப்போமே!
Be the first to rate this book.