பெரும் கலைஞர் ஒருவரின் அதிசயங்களும் வதைகளும் நிறைந்ததொரு வாழ்வுச் சித்திரம். தன் கவசங்களையெல்லாம் கலைக்கு ஒப்புக்கொடுத்து ஏதுமற்றவராகி நின்று எல்லாமாகித் தீர்ந்தவரின் உலகம். நவீன சொல் முறையினூடே கலையின் ஆழங்களை நோக்கியும் அது சார்ந்த புரிதல் மற்றும் கலை மனதின் கவிதார்த்த தனித்துவங்களை நோக்கியும் ஒளியுறுத்திக் காட்டும் நாவல். லௌகிக மலட்டுப் பிரக்ஞையை கலையான்மிகத்தின் சுடரால் தீண்டுகிறது இது. ஓவியத்தை ஒரு குறியீடாகக் கொண்டு சகல உயர் கலைகளின் உன்னதங்களின் பால் நம் மனம் விழைய இறைஞ்சுகிறது. எதிர் நின்ற கடும் அவமரியாதைகளும் புறக்கணிப்புகளும் இறுதியில் தோற்றுப்போக, காலத்தில் ஒரு பேராகிருதியாய் எழுந்த இந்த ஓவியரைப் பற்றிய அரும் புனைவு - சி. மோகனின் காலகால கலை நம்பிக்கையாலும் அர்ப்பணிப்பாலும் எளிதில் சாத்தியமாகியிருக்கிறது. இவ்வகையில் தமிழில் அபூர்வ முதல் நிகழ்வு. ஒரு புதிய திசை வழியில் நம் கண் திறக்கும் ஓர் இலக்கியச் சம்பவம்.
- யூமா வாசுகி
Be the first to rate this book.