அழிந்துவரும் முதன்மையான நாட்டுப்புறக் கலைகளில் ஒன்று வில்லிசை. வாத்தியங்கள் என்று சொல்லக்கூடிய எதுவுமே இல்லாமல், பனையிலிருந்தும் பனையோடு தொடர்புடைய சில பொருள்களையும் வைத்துக்கொண்டு நிகழ்த்தப்பட்ட கலைதான் வில்லிசை.
சோ. தர்மன் இந்த நூலில் பிச்சைக்குட்டியின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்வதன் மூலம் வில்லிசை அவருடைய மடியில் தவழ்ந்து வளர்ச்சி பெற்ற விதங்களை நம்மிடம் மீட்டுத் தருகிறார்.
சிறு தெய்வ வழிபாட்டிற்கு மட்டுமே நிகழ்த்தப்பட்ட இந்தக் கலை, நெல்லை அய்யம்பிள்ளைக்குப் பிறகு பிச்சைக்குட்டியாபிள்ளையிடம் வந்துசேர்ந்து, முழுவடிவம் பெற்ற கதையை நம்மிடம் சொல்லும் போது நமக்குப் புதிய அனுபவத்தைத் தருகிறார் நூலாசிரியர்.
வில்லிசையில் புதுப்புதுக் கதைகள், காலத்திற்கேற்ற நவீனம், புதிய இசைக் கருவிகளைப் புகுத்தியது, சங்க இலக்கியத்திலும் ஆங்கிலத்திலும் இருந்த புலமை, வளமான குரல்வளம், பல்வேறு ராகமெட்டுக்கள், சங்கீத ஞானம், சமகாலப் பிரச்சினைகளைக் கச்சிதமாகக் கதையினூடே சொருகுதல், துளியும் ஆபாசம் இல்லாமல் நினைத்து நினைத்துச் சிரிக்கவைக்கும் நகைச்சுவை என ஒவ்வொன்றும் பிச்சைக்குட்டியிடம் எவ்வாறு கைகூடியிருந்தன என்பதை விவரிப்பதன் மூலம் சோ. தர்மன் வில்லிசையின் உள்நாதத்தை நம்முள் பரவ விடுகிறார்.
அயல்நாட்டினருக்கும் என்.எஸ். கிருஷ்ணன், எஸ்.எஸ். ராஜேந்திரன், டி.ஏ. மதுரம் போன்ற திரைக் கலைஞர்களுக்கும் வில்லிசையைப் பயிற்றுவித்த பிச்சைக்குட்டியின் ஆசிரியம் குறித்தும் நூலாசிரியர் கூறுகிறார்; நம்மையும் அதில் பங்கேற்க வைக்கிறார்.
தமிழக நாட்டுப்புறக் கலைகளில் ஆர்வமுள்ளவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்.
Be the first to rate this book.