ஆனந்த விகடன் தனது 90-வது ஆண்டுக் கொண்டாட்டத்தில் திளைத்திருக்கும் இந்த இனிய தருணத்தில், இன்னொரு மகிழ்ச்சியான தகவல். விகடன் பிரசுரத்தின் வெள்ளி விழா ஆண்டு இது. இந்த ஆண்டில், விகடன் பிரசுரத்தின் 1000-வது புத்தகம் வெளியாவது கூடுதல் இனிப்புச் செய்தி. 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல அருமையான புத்தகங்களை வெளியிட்டு வருவதோடு, ஒவ்வோர் ஆண்டும் சென்னை புத்தகக் காட்சியில் நாம் விற்பனையில் சாதனை படைத்து வருவதையும் தமிழ்கூறு நல்லுலகமே அறியும்.
விகடன் பிரசுரத்தின் 1000-வது புத்தகமாக எது இருக்கலாம் என ஆவல் எழுந்தது. ஆனந்த விகடன் மற்றும் குழுமப் பத்திரிகைகளின் பங்களிப்போடு கூடிய சிறந்ததொரு தொகுப்பாகக் கொண்டுவரலாம் என முடிவு செய்தோம். கூடவே, இந்த 1000-வது புத்தகத்தை 1000 பக்கங்கள் கொண்ட அற்புதமான புத்தகமாகக் கொண்டுவர விரும்பினோம். ‘விகடன் 1000’ என அர்த்தமுள்ள தலைப்பும் அமைந்தது. இதோ… ‘விகடன்-1000’ புத்தகம் உங்கள் கைகளில்..!
1926 முதல் ஆனந்த விகடனில் வெளியான சிறந்த கட்டுரைகள், முக்கியத் தலையங்கங்கள், கார்ட்டூன்கள், அட்டைப்படங்கள் மற்றும் வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பாக இது மலர்ந்திருக்கிறது. விகடன் குழுமத்தின் மற்ற பத்திரிகைகளிலிருந்தும் மிகச் சிறப்பான கட்டுரைகளை இதில் சேர்த்து, ஒரு பல்சுவை விருந்தாக உங்களுக்குப் பரிமாறுவதில் மகிழ்ச்சி. இது, விகடன் பிரசுரத்தின் 1000-வது புத்தகம். சரி, விகடன் நிறுவனம் வெளியிட்ட முதல் புத்தகம் என்ன? தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறதல்லவா? இதில் அது பற்றிய விரிவான கட்டுரை உண்டு. ஆனந்த விகடன் பத்திரிகையை பூதூர் வைத்தியநாதையரிடமிருந்து எஸ்.எஸ்.வாசன் ரூ.200 விலை கொடுத்து வாங்கினார் என்று நம்மில் சிலர் அறிந்திருப்போம். அந்த பூதூர் வைத்தியநாதையரைப் பற்றிய மேல் விவரங்கள் தெரியுமா? அவரைப் பற்றிய கட்டுரையும் இதில் இடம்பெற்றுள்ளது.
விகடனாரின் கொம்பு ரொம்பவே பிரசித்தம். ஆனால், விகடனாருக்குக் கொம்பு முளைத்த கதை தெரியுமா? அதுவும் இதில் உண்டு. விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியனின் மாண்பு குறித்து சீனியர் வாசகர்கள் அறிவார்கள். ஆனால், அவர் ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்த மனம் திறந்த, நீண்ட பேட்டியை எத்தனை பேர் படித்திருப்பார்கள்? அதையும் இந்தப் புத்தகத்தில் கொடுத்துள்ளோம். இப்படி இந்தப் புத்தகத்தில், நவரசங்களும் கொண்ட கட்டுரைகள் ஏராளம் உள்ளன. ஒவ்வொன்றையும் ஆற அமர நிதானமாகப் படியுங்கள்; ரசியுங்கள். உங்கள் நூலகத்தில் இந்த ‘விகடன்-1000’ புத்தகம் ஒரு கம்பீரமான சிம்மாசனத்தில் அமரட்டும். ஆனந்த விகடனின் வாசகர்களாகிய நீங்களே எங்களின் உரமும் வரமும். இந்தப் புத்தகம் உங்களுக்கே சமர்ப்பணம்.
Be the first to rate this book.