திராவிடக் கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர், தொ.பரமசிவன். கலாசாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். மாலை கட்டியபின் எஞ்சிய பூக்களை த் திருநெல்வேலி பகுதியில் விடுபூக்கள் என்பார்கள். இந்நூற் கட்டுரைகள் அனைத்தும் விடுபூக்கள்தான். இதுவரை வெளியாகியுள்ள தொ.ப. புத்தகங்களில் இடம்பெறாமல் விடுபட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். எச்சங்களாகவும் மிச்சங்களாகவும் சிதறிக்கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை எடுத்துரைத்து வரும் தொ.ப.வின் தொடர் பயணத்தில் இத்தொகுப்பு இன்னும் கவனம் பெறாத சிலவற்றை முன்வைத்து நகர்கின்றது. தமிழ்ச் சமூக வாழ்வியலைக் கருத்தியல் நிலையில் நினைவுபடுத்தும் இக்கட்டுரைகள் அதன் அடிப்படை அரசியலைக் கேள்விக்குள்ளாக்கவும் செய்கின்றன. சிதம்பரம் கோயிலைப் பாடுகின்ற சேக்கிழார் தஞ்சைப் பெருவுடையார் கோயிலை ஏன் பாடவில்லை? இராசராசனை இன்னும் கொண்டாடுவதேன்? என்பன போன்ற நுட்பமான பல கேள்விகளுக்கு இப்புத்தகம் விடையளிக்கின்றது. மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இக்கட்டுரைகள் வழங்கும்.
Be the first to rate this book.