பட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு இளமை மிகுந்த தோற்றத்துக்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துக்களிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டைப் பிரபாகரின் வெற்றிக்குக் காரணம். 1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை என்ற முகவரி வாசகர்களுக்கு மனப்பாடம். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த அவருடைய ""தொட்டால் தொடரும்"" ,"" கனவுகள் இலவசம்"" ஆகிய கதைகள் இன்றும் வாசகர்களால் விரும்பிப் படிக்கப்படுபவை.
அன்றிலிருந்து இன்று வரையிலும் தனது துள்ளலான நடை மற்றும் வசீகரமான கதை சொல்லும் முறையால் அடுத்தடுத்த தலைமுறை வாசகர்களையும் வென்று நூற்றுக் கணக்கான சிறுகதைகள் , நாவல்கள்,தொடர்கதைகள் ,தொலைக்காட்சித் தொடர்கள் , திரைப்படங்கள் என்று எழுத்தின் அத்தனை தளங்களிலும் தனது முத்திரையைத் தொடர்ந்து பதித்துவரும் பட்டுக் கோட்டை பிரபாகரின் புகழ் பெற்ற நாவல்களில் ஒன்று விபரீதத்தின் விலை வித்யா.
வாழ்க்கைப் பயணத்தில் இளமைப்பருவத்தில் நாம் விளையாட்டாய் போடும் சுருக்குகள் அச்சமயம் சுவாரசியத்தைக் கொடுத்தாலும் கால ஓட்டத்தில் சூழல் இறுக இறுக நாம் சற்றும் எதிர்ப்பாராத சந்தர்ப்பத்தில் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சாய் மாறி நம் நிம்மதியை, சந்தோஷத்தை , எதிர்காலத்தை காவு கேட்கும்.
மனோகரின் இளமைக் காலக் காதல், தொழில் வகையில் தெய்வநாயகத்துடனான மோதல், அவனது அன்பு மனைவி வித்யாவின் விபரீதமான குறும்புகள் ஆகிய சுருக்குகள் எப்படி ஒரே புள்ளியில் இறுகி மனோகரின் வாழ்க்கையை புரட்டிப் போடும் மர்ம முடிச்சாக மாறுகிறது என்பதுதான் இக்கதையின் சிறப்பம்சம்.
தன் துப்பறியும் கதைகளின் விறுவிறுப்பான கதயம்சத்திற்காகப் பெயர் போன பி.கோ.பி. எப்படி அந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்கிறார் என்பதில்தான் சூட்சுமம் இருக்கிறது.
Be the first to rate this book.