அரசாங்க வேலையை நோக்கி இளைஞர்கள் ஓடியது ஒரு காலம்; அந்தக் கதவுகள் திறக்கப்படாததால் தனியார் துறையை நோக்கிப் படையெடுக்கிறார்கள். ஆனால், எத்தனை சதவிகிதம் பேர் தொழில் முனைவோராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்? பரம்பரைத் தொழில் செய்பவர்கள் மற்றும் பரம்பரைப் பணக்காரர்கள் மட்டுமே தொழில் செய்து முன்னுக்கு வருகிறார்கள். படித்த இளைஞனுக்கு தொழில் முனைவோராக ஆவதற்கு குடும்பத்திலும் சமுதாயத்திலும் பல இடைஞ்சல்கள். இந்த வகை இளைஞர்களுக்குத் தேவை நல்ல வழிகாட்டுதலும் சரியான அறிவுரையும். இதைத் தெளிவாகவும் தனது அழகான மொழி நடையாலும் எடுத்துரைக்கிறார் நூல் ஆசிரியர் இயகோகா சுப்பிரமணியம்.
பிரபல தொழில் அதிபராக இருப்பதாலும், பழுத்த அனுபவசாலியாக இருப்பதாலும் வாழ்க்கையில் வெற்றி வெளிச்சத்தைக் காண விரும்பும் அனைவருக்கும் முன் உதாரணமாகத் திகழ்கிறார். தான் சந்தித்த மனிதர்கள், பிற நாட்டுக் கலாச்சாரம் மற்றும் பிரபல நிறுவனங்களின் வெற்றி ரகசியங்களையும் கூறி சுய முன்னேற்றத்துக்கான வழிவகைகளை அழகாக எடுத்துரைக்கிறார். சுயமுன்னேற்றம் மற்றும் தொழிலில் வெற்றி என்பது ‘ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ள கலாச்சாரம், அரசியல் அமைப்பு, தனி மனிதப் பண்பாட்டின் அடிப்படையில்தான் அமைகின்றன’ என்று ஆணித்தரமாக அடித்துரைக்கிறார். வெற்றி வெளிச்சத்தில் உலாவ நினைக்கும் அனைவருக்கும் இந்த நூல் பயன்படும்!
Be the first to rate this book.