சரவணன் சந்திரன் ஓராண்டிற்கு முன்பு அந்த நிகழ்ச்சியை இயக்கும் பொறுப்பை விட்டுவிட்டார். ‘‘ஒரு உச்சி வெய்யில் வேளையில் உயிர்மை அலுவலக வாசலில் வைத்து ‘‘ஏன் வந்துட்டீங்க?’’ என்றேன். ‘‘நீங்கதான் சார் அந்த முடிவை நோக்கி என் மனதை செலுத்தினீர்கள்’’ என்றார். நான் அவரது சுருங்கிய கண்களை உறறு நோக்கினேன். பர்ஸைத் திறந்து நான் மூன்றாண்டுகளுக்கு முன்பு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பற்றி குங்குமத்தில் எழுதிய கட்டுரையின் பேப்பர் கட்டிங்கை எழுத்துக்காட்டினார். அது பழுப்பேறிப்போயிருந்தது.
‘‘இதை ஏன் வச்சிருக்கீங்க?’’ என்று கேட்டேன்.
‘‘சுய பரிசோதனைக்கு ஒரு பலம் தேவையாக இருந்தது. இதை டெய்லி எடுத்துப் படிப்பேன் சார்’’ என்றார்.
எனக்கு ஏதோ இனம்புரியாத சங்கடம் ஆக்ரமித்தது. ‘‘இல்ல சரவணன் .. அந்த வேலையில் உங்களுக்கு யாருக்கும் கிடைகாத வேற ஒரு அனுபவம் கிடைத்தது..வாழ்க்கையின் சூதாட்டங்களை, அதன் விசித்திரங்களை காணும் பெரும் வாய்ப்பு .. அந்த நிகழ்ச்சி எனக்கு பிடிக்கவில்லை.. ஆனால் அதன் வழியே நீஙகள் சந்தித்த மனிதர்களும் அவர்கள் சொன்ன கதைகளும் அந்த நிகழ்ச்சியை தாண்டியவர்கள் என்று எனக்கு தெரியும்.. அவர்களை நீங்கள் மொழிக்குள் படைப்புக்குள் நிரந்தரப்படுத்துங்கள்’’ என்றேன்.
அவர் நம்பிக்கையில்லாமல் என்னை பார்த்தார். நான் அவர் சொன்ன ஒரு சம்பவத்தை ‘வெண்ணிற ஆடை’ என்ற ஒரு கவிதையாக எழுதிக்காட்டினேன். அதை அவரே அப்போதுதான் முதன்முதலாக கேள்விப்படுப்வதுபோல அதிர்ந்தார். ‘‘இதுதான் எழுத்தின் வலிமை.. இந்த நிகழ்ச்சியில் நீங்கள் சந்தித்த இந்த இருண்ட உலகத்தின் சில முகங்களையேனும் எழுதுங்கள்’’ என்றேன்.
சரவணன் எழுதியே விட்டார். 20 உண்மைக்கதைகளை எழுதிக்கொடுத்துவிட்டார். இது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் எழுத்து வடிவமல்ல. மாறாக தொலைகாட்சி திரைகளில் சொல்லமுடியாத பல உண்மைகள் இந்தக் கதைகளில் சொல்லப்படுகின்றன். இதுவும்தான் தமிழ் வாழ்க்கை. இந்த வாழ்கையின் விசித்திரங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை.இந்த உண்மைகளை , இந்த மனிதர்களை நேருக்கு நேர் பார்க்கும் தைரியம் நமக்கு இல்லை. அந்த மனிதர்களை அவர்களது நியாயங்களுடனே இக்கதைகள் சந்திக்கின்றன.
- மனுஷ்யப்புத்திரன்
Be the first to rate this book.