நீலமேகவண்ணனாகிய கண்ணனின் கதையைச் சொல்லும் நவீன நாவல் ‘நீலம்’. கண்ணனின் இளமைத்தோழியான ராதையை மையமாக்கி கண்ணனின் கதை விரிகிறது. ராதை அறியும் கண்ணன் ஒரு சித்திரம். அவளைச்சுற்றி இருப்பவர்கள் அறியும் கண்ணன் இன்னொரு சித்திரம். ராதை அறிவது குழந்தையை, தோழனை, காதலனை. அவள் கொண்டது அழியாத பிரேமை. மறுபக்கம் கம்சனின் சிறையில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து மதுரையை வென்றடக்கும் கிருஷ்ணனின் கதை.
கம்சனும் ராதை அளவுக்கே கிருஷ்ணனை எண்ணிக்கொண்டிருந்த உபாசகனே. அவன் சென்ற வழி ஒன்று. ராதை சென்ற வழி ஒன்று. இரு வழிகளையும் இருவகை யோகமரபுகளுக்கான குறியீடுகளாகவும் இந் நாவல் கையாள்கிறது. ராதாமாதவம் என்றும் ராஸமார்க்கம் என்றும் சொல்லப்படும் கிருஷ்ண உபாசனையை அதை உணரும் வாசகர் களுக்காக முன்வைக்கிறது.
பூத்துக்குலுங்கும் விருந்தவனம், பெருகிச்செல்லும் யமுனை, வேய்குழல்நாதம் என இனிமையை அனைத்து வரிகளிலும் நிறைத்துவைத்திருக் கிறது இந்நாவல். பித்தின் விளிம்பில் நடனமிட்டுச்செல்லும் மொழி. ஒவ்வொரு வரியையும் வாசிக்கவைக்கும் கவித்துவம். கண்ணனை இலக்கியம் வழியாக அணுகிச்செல்லும் ஒரு யோகம் இது.
Be the first to rate this book.