அரியலூர் மாவட்டம், தஞ்சாவூரான் சாவடி கிராமம் இவர் ஊர். வளர்ந்தது முந்திரிக்காட்டில் விளைந்த காட்டுக்களாக்காய், நாணாப்பழம், காரக்காய், சூரக்காய், நுணாப்பழம், காட்டு நெல்லிக்காய் ஆகியவற்றைத் தின்று, பள்ளிப் படிப்பு வரதராசன் பேட்டை, தொன்போஸ்கோ உயர்நிலைப் பள்ளியில்.
முந்திரிக்காட்டில் வளைந்து நெளிந்து செல்லும் ஒத்தையடிப் பாதையில் சைக்கிள் விடுவது இவருக்குப் பிடித்த பள்ளிப் பருவ அனுபவம். வழுக்கைத் தலை சாமியார் சுறுசுறுப்பாக விளையாடுவதைப் பார்த்து, தானும் ஒரு சலேசிய துறவியானவர். மெய்யியல் இறையியல் படிப்பில் இளங்கலைப் பட்டங்கள் பெற்றவர். இளங்களைத் தமிழ், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்றவர். மொழியறிஞர் கு.பரமசிவம், பட்டிமன்றப் பேச்சாளர் சாலமன் பாப்பைய்யா ஆகியோரை ஆசிரியராகக் கொண்டவர்.
முதுகலைத் தமிழ் மற்றும் ஆய்வுப் படிப்பு மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையில், “வேலூர் மாவட்டச் சிறார் கதைகளில் நீதியும் கேலியும்” என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டவர்.
கடந்த 20 ஆண்டுகளாக, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் விரிவுரையாளர், துணை முதல்வர், மாணவர் ஆலோசகர் ஆகிய பணிகள்.
கற்றல் கற்பித்தலில் நாடகத்தின் சிறப்பிடத்தை உணர்ந்து கடந்த ஒன்பது ஆண்டுகளாக, கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்களைக் கொண்டே மாற்று நாடக இயக்கம் என்ற வளாக அரங்கைத் தோற்றுவித்துப் பல்வேறு தீவிர நாடக முயற்சிகளுக்கான களத்தை அமைத்து நிர்வகித்து வருபவர்.
2010 முதல் தமிழ்த்துறைத் தலைவராகவும் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி வருபவர். சாலையோர சந்திப்புகள் தொகுதி 1,2 மற்றும் வரலாறும் வழக்காறும் ஆகிய நூல்களுக்கு ஆசிரியர்.
Be the first to rate this book.