பல்வேறு ஸித்திகளை எனக்கு வழங்க பைராகி முயன்றபோதும் தீர்மானமாக மறுத்து வந்திருக்கிறேன். ஏனோ, அவை பூமியின் இயல்புக்கு ஒவ்வாத தன்மை கொண்டவை என்றொரு அபிப்பிராயம் எனக்கு. ஆனால், அவரிடம் நான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மிகமிக ஆசைப்பட்ட ஸித்தி ஒன்று உண்டு.
விரும்பும் தறுவாயில் இயற்கை மரணத்தை வருவித்துக்கொள்ளும் கலையை நான் பயிலவில்லை. இறந்தவர்களின் உலகத்துக்குள் பிரக்ஞை தவறி நுழையும் மற்றவர்கள் மாதிரி இல்லாமல், புலனுணர்வு இருக்கும்போதே நுழைய வேண்டும் என்பது என் விருப்பம். தெரிந்தே கடக்கவேண்டும் அந்த நுழைவாசலை.
அதைத் தற்கொலை என்று பெயரிட முடியாது வேதம். ஏதோவொன்றிடமிருந்து தப்பிப்பதற் காக மேற்கொள்வதைத்தான் தற்கொலை என்று சொல்லத் தகும். முடிவற்று நீள்கிற பிரயாணத்தின் பகுதியாய் ஒரு வண்டியிலிருந்து இறங்கி வேறொரு வண்டியில் ஏறுவதை எதிர்மறையான விஷயமாய் எப்படிச் சொல்லலாம்.
அத்தனை பாணங்களும் அஸ்திரங்களும் சாய்க்க முடியாதவராகத்தானே பீஷ்மர் இருந்தார். தாம் இஷ்டப்பட்ட நாளில், இஷ்டப்பட்ட முகூர்த்தத்தில் இயற்கையான மரணம் எய்தினாரில்லையா.
என் குருநாதரான பைராகி உறக்கம்போல மரணத்தை இழுத்துப் போர்த்திக்கொள்ளவில்லை? உயிரைத் தரித்த உடலமாக ஜனித்த யாருக்கும் இயலும் விஷயம் அது என்றுதான் படுகிறது. என்ன, அதற்கான அப்யாசங்கள் முக்கியம்.
Be the first to rate this book.