வெளிநடப்பு - வாசக எதிர்பார்ப்புடன் தமிழ்க் கவிதை உலகில் தொடர்ந்து இயங்கி வரும் பழநிபாரதியின் இரண்டாவது கவிதை நூல். முதற்பதிப்பு 1987. எண்பதுகளின் சமூக அரசியல், போராட்டங்கள், மக்களின் மனநிலை இவற்றுக்கிடையில் பிறந்தவை இந்தக் கவிதைகள். வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான், கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் ஆகியோரின் அணிந்துரைகள் காலமும் கவிதையும் குறித்து கூர்ந்து பேசுகின்றன.
"கவிதையில் மக்களாட்சிதான் புதுக்கவிதையின் புறப்பாடு. ஆகவே அரசியல் ஜனநாயகத்தில் உண்மையான மக்கள் நாயகம் மணிமுடி தரிக்கிற காலம் வரை ஜனநாயகம் எப்படி மூச்சுத் திணறுமோ அப்படியே இந்நாளில் கவிதைக்கும், அதன் உயிர்ப்பைக்கும் ஒரு
போராட்டமே நடந்து கொண்டிருக்கிறது.
சிட்டுக்குருவியின் அலகில் ஆரோகணித்திருப்பதை எழுதிக்காட்ட எடுத்துக்கொள்கிற வார்த்தைகளை வைத்துத்தான் பழநிபாரதி சிலுவை சுமந்து போகிற மனித குமாரர்களைப் படம்போட்டுக் காட்டுகிறார்.
'வெளிநடப்பு' என்கிற தலைப்பே இவரது கலவரக் கற்பனைக்கு நெற்றிப்பொட்டாக நிமிருகிறது. இது வெளிநடப்பு மாத்திரம் அல்ல; உள்நடப்பு; உள்ள நடப்பும் ஆகும்".
- வலம்புரிஜான்
"எதியோப்பியாவிலிருந்து ஈழம் வரை, மோட்சம் தியேட்டரிலிருந்து சிதம்பரம் போலீஸ் ஸ்டேஷன்வரை உலகின் எல்லா மூலை முடுக்குகளையும் உற்று நோக்கியிருக்கின்றன இவரது ஒரு ஜோடிக் கண்கள். அங்கு புரளும் இருண்ட வாழ்க்கையைப் பேசுகிறார். இடை இடையே நம்பிக்கை வெளிச்சங்களைக் கொட்டி நம்மை நிமிர வைக்கிறார்.
பானை வனையும் குயவனின் விரல்கள் களிமண்ணை அறிந்திருக்கிற அளவுக்கு இவரது பேனா தமிழ்மொழியின் நுட்பதிட்பங்களை அறிந்திருக்கிறது. எனவே தான் இந்தக் கவிதைகளில் கற்பனை அழகில் மட்டுமல்லாமல், கருத்துப் பரிமாறலிலும் எந்தவிதச் சிக்கலுமில்லை.
கடவுளற்ற, இந்த மயான உலகத்தில் பழநிபாரதி அன்பெனும் பயிரைத் தழைக்க வைப்பதின் மூலமாக, மானுடத்தைக் காப்பாற்ற முடியும் என்று நம்புகிறார். இந்த நம்பிக்கைதான் இவர் கவிதை யின் பிற மேல் தோல் அம்சங்களைக் காட்டிலும் முக்கியமானது என்று நான் நம்புகிறேன்".
- இந்திரன்
Be the first to rate this book.