தொல்காப்பியப் புறத்திணை இயலும், புறப்பொருள் வெண்பாமாலைச் சூத்திரங்களும் இன்றும் இந்த வீரர் உலக நிகழ்ச்சிகளை அறியத் துணை செய்கின்றன. அப்படியே புறநானூறும் பதிற்றுப்பத்தும் புறப்பொருள் வெண்பா மாலையில் உள்ள உதாரணச் செய்யுட்களும் பழைய உரையாசிரியர்கள் காட்டும் மேற்கோட் பாடல்களும் அவற்றின் விரிவை அறிந்துகொள்ளப் பயன்படுகின்றன. இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு கோவைப்படுத்தி எழுதியதே இந்தப் புத்தகம்.
புறப்பொருளின் இலக்கணத்தை விளக்க வேண்டுமென்றோ, அவ் விலக்கணம் எவ்வாறு தோன்றி விரிந்து வளர்ந்தது என்பதை ஆராய்ச்சி முறையில் உணர்த்த வேண்டுமென்றோ எண்ணி இதனை யான் எழுதவில்லை. அந்த இலக்கண இலக்கியங்களால் புலனாகும் வீரப் பண்பின் சிறப்பையும் அதனால் விளைந்த வீரர் செயல்களையும் ஒழுங்குபடுத்தி இணைத்துக் காட்டவேண்டும் என்பதே என் கருத்து.
சீனர் நம் பாரத நாட்டின்மேல் படையெடுத்த காலத்தில் நாடு முழுவதும் ஒரே எண்ணத்தோடு எழுந்து, பகைவனுக்கு மாறக ஒரே குரலை எழுப்பியது. அந்தச் சமயத்தில் தமிழ் இலக்கண இலக்கியங்களில் வரும் வீரர் உலகத்தை ஒருவாறு காணும்படி செய்யலாம் என்ற விருப்பத்தினால் இந்தக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். 'கலைமகளில் பதினேழு மாதங்கள் இக்கட்டுரைத் தொடர் வெளியாகியது. கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட எண்ணியபோது இறுதியில் ‘பின்னுரை' என்ற ஒன்றை எழுதிச் சேர்த்தேன்.
தமிழ் மக்களின் வீரம் பழங்காலத்தில் எவ்வாறு உயர்ந்து நின்றதென்பதை ஓரளவு அறிவதற்கு இச் சிறு நூல் உதவுமென்றே நம்புகிறேன்.
Be the first to rate this book.