"நீ கட்டாயம் இந்த வருஷம் வருஷப் பிறப்புக்கு வந்து வாசித்துத்தான் ஆகவேணும்" என்றார் ஐயாவையர்.
"சுவாமி, உங்கள் வார்த்தையைத் தட்டிச் சொல்வேனா? இருந்தாலும் சூரைக்குடி எல்லையை மிதிக்கவே என் மனம் சிறிதும் இடம் கொடுக்கவில்லை. நான் அங்கே வருவதில்லை என்று தீர்மானித்தது முதல், இன்றுவரையில் அதை மாற்றிக்கொள்ளும்படியான ஒரு மாறுதலும் ஏற்படவில்லை. தயவு செய்து என்னைக் கட்டாயப்படுத்தாதேயுங்கள்" என்றான் அங்கமுத்து.
"நீ சொல்வது கொஞ்சமும் சரியல்ல. சூரைக்குடிவாசிகள் உன் வாசிப்பைக் கேட்க எவ்வளவு ஆவலுடன் இருக்கிறார்கள்! நீ அவர்கள் இஷ்டத்தைப் பூர்த்தி செய்யவேணும்.''
"வாஸ்தவந்தான். எனக்கும் நண்பர்களின் முகங்களைப் பார்க்க வேணும் என்ற ஆசை அதிகமாகத்தான் இருக்கிறது. ஆனால், அஞ்சு வருஷத்துக்கு முன் நடந்த சம்பவத்திலிருந்து எனக்கு அந்த ஊரை மிதிக்கவே இஷ்டமில்லை.''
"உன் சொந்த மனவருத்தத்துக்காகப் பொது ஜனங்களைப் பாதிக்கும்படி நடந்துகொள்ளக்கூடாது. அவர்கள் ஏன் உன் வாசிப்பைக் கேட்கும் உரிமையை இழக்க வேணும்? நீ சொல்வது கொஞ்சமேனும் நியாயமே இல்லை'' என்றார் ஐயாவையர்.
"சுவாமி, நீங்கள் சொல்வது சரி. ஆனால், என் மனத்தில் அஞ்சு வருஷத்துக்கு முன்பு ஏற்பட்ட புயலையும், அதனால் சூரைக்குடி மண்ணையே மிதிக்கக்கூடாது என்று நாள் தீர்மானிக்கும்படி செய்த விருத்தாந்தத்தையும் அறிந்தால், என்னை இவ்வளவு தூரம் நீங்கள் கட்டாயப்படுத்தமாட்டீர்கள். அந்த விவரம் முழுவதும் உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ?"
"கூடமாகத்தான் தெரியும். முழு விவரமும் தெரியாது.''
"நீங்கள் என் தமையன் மாதிரி. உங்களிடம் சொல்வதில் என்ன? கேளுங்கள் கதையை" என்று சொல்ல ஆரம்பித்தான்.
- புத்தகத்திலிருந்து...
Be the first to rate this book.