ஒளவை துரைசாமிப் பிள்ளை எழுதிய "வரலாற்றுக் காட்சிகள்', "சேரமன்னர் வரலாறு', "தமிழ்த்தாமரை', "செம்மொழிப் புதையல்' ஆகிய நான்கு நூல்களின் தொகுப்பு இந்நூல்.
சங்ககாலம், பல்லவர் காலம், இடைக்காலப் பாண்டிய, சோழர் காலம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய மன்னர்கள் சிலருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளில் சிலவற்றை எடுத்துக் கொண்டு சிறுகதை வடிவில் சொல்லும் முயற்சியாக எழுந்துள்ள "வரலாற்றுக் காட்சிகள்' நூலில், கரிகாலன், கோப்பெருஞ் சோழன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெரு வழுதி, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், முதல் மகேந்திரவர்மன், இரண்டாம் நந்திவர்மன், நெடுஞ்சடையன் பராந்தகன், இரண்டாம் ராசாதி ராசன் உள்ளிட்ட பல மன்னர்கள் சார்ந்த நிகழ்வுகள் பழந்தமிழ் இலக்கியச் சான்றுகளின் வழி விளக்கப்படுகிறது.
அதேபோன்று "சேரமன்னர் வரலாறு' பல்வேறு வரலாற்று நூல்கள், ஆதாரங்கள், இலக்கியங்களின் அடிப்படையில் சேரமன்னர்களின் ஆட்சிமுறை, வணிகம், போர்கள், பண்பாடு ஆகியவற்றைக் கூறுகிறது.
"தமிழ்த்தாமரை' நூல் தமிழகத்தின் வட எல்லை சங்க காலத்திலிருந்து, விசயநகர மன்னர்கள் காலம் வரை எவ்வாறு இருந்திருக்கிறது என்பதை விளக்கும் கட்டுரை, பழந்தமிழர் நாகரிகத்தை, புறநானூறு காட்டும் அரசியலை, தமிழர் போர்த்திறத்தை, புறப்பாட்டுணர்த்தும் தமிழ் வாழ்வை, தமிழ் மகளிரைப் பற்றிக் கூறும் கட்டுரைகளென விரிகிறது.
"செம்மொழிப் புதையல்' நூலில் இலக்கியம் சார்ந்த கட்டுரைகளும், அரசியல், வணிகம் சார்ந்த கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. ஒளவை துரைசாமிப் பிள்ளையின் நூற்களின் தொகுப்பான இந்நூல் தமிழ் இலக்கியம், வரலாறு, பண்பாடு தொடர்பான பன்முக அறிவை ஒருவர் பெற உதவும் என்பதே உண்மை.
Be the first to rate this book.