உலகத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் அதிக எண்ணிக்கையில் வாழும் பெருநிலப்பரப்பு இந்தியா. இங்கு வாழும் இந்துப் பெரும்பான்மையினர் தங்களுடைய அன்றாட வாழ்வில் இஸ்லாமிய நாகரிகத்தின் மூலம் பல பெருமிதங்களைப் பெற்றிருந்தாலும், தங்களுடன் வாழும் முஸ்லிம்களை ஓர் அயலினக் கூறாகவும் வெறுப்புக்குரியவர்களாகவும் மாற்றியது எவ்வாறு?
இந்த நூலில் எம். என். ராய், இஸ்லாம் உலகச் சமுதாயங்களிலும் இந்தியாவிலும் பண்பாட்டுரீதியாக எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகிறது என்பதைச் சமூகப் பொருளாதார நோக்கில் விவரிக்கிறார்.
இதில் ஏழு கட்டுரைகள் இடம்பெறுகின்றன. இந்த உலகில் அந்நியமான, ஒதுங்கிய சமயம் அல்ல இஸ்லாம். அது முன்னேற்றத்தின் கூறுகளைக் கொண்ட நாகரிகம், பண்பாடு என்பதிலிருந்து அவர் பேசத் தொடங்குகிறார். இஸ்லாத்தின் கறாரான ஓரிறைவாதம், அதன் நடைமுறைப் பாங்கு, அதற்கான சூழல் என்பவற்றிலிருந்து அவருடைய எழுதுதல் பயணிக்கிறது.
இஸ்லாம் ஓரிறைக் கோட்பாட்டுச் சமயங்களில் ‘சமூகத் தன்மை’ மிகுந்தது, அது பரவிய விதம், பிற நம்பிக்கையாளர்களுக்கும் ஓர் உலகளாவிய பொதுவெளியை நிறுவிக்கொள்ள வழிவகுத்தது, இடைக்கால ஐரோப்பாவில் அறிவியல் நோக்கை மீட்க உதவியது, நாடோடி அரபுப் பழங்குடியினரை ஒன்றிணைத்தது, சீரழிந்த பேரரசுகளை அழித்துப் புரட்சிகர இயக்கமாகப் பரிணமித்தது, பகுத்தறிவுக்கான அடித்தளத்தை அமைத்தது, இந்து-முஸ்லிம் தப்பெண்ணங்களைத் தோற்றுவித்த அரசியல் உறவுகள், வைதீகத்தால் புதிய உடைவுக்காகக் காத்திருந்த இந்திய மரபை உள்வாங்கிய விதம் போன்றவற்றை இந்த நூல் கூறுமிடங்கள் ஈர்ப்புமிக்கதாய் இருக்கின்றன.
இஸ்லாத்தை அறிய விரும்பும் உங்களுக்கு இந்த நூல், ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொடுக்கும்; இஸ்லாம் ஏன் பல நாடுகளில் விரைவாகப் பரவுகிறது என்பதைக் கண்டுகொள்ளவும் அது உதவும்.
Be the first to rate this book.