வான்காவின் வாழ்க்கைக் கதையை எழுத்தில் வடிப்பது என்றால் அது ஒரு சாதாரண விஷயமா என்ன? அவன் வாழ்ந்த இடங்களுக்குப் போய், அவனுடன் பழகிய மனிதர்களைச் சந்தித்து, அவனைப் பற்றி தெரிந்தவர்களையெல்லாம் விசாரித்து, அவன் எழுதிய கடிதங்களைத் திரட்டி, அவனின் ஓவியங்கள் இருக்குமிடம் தெரிந்து, அவனின் தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் – ஓவியக்கலை சம்பந்தப்பட்ட அவனின் படிப்படியான வளர்ச்சி நிலைகளையும் உயிரோட்டத்துடன் சொற்களால் வடித்து...
அப்பப்பா... இர்விங் ஸ்டோன் ஒரு உலகமகா ஓவியத்தையே இந்த நூல் வடிவில் வரைந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
வான்காவின் காதல் தோல்விகள், ஏமாற்றங்கள், தனக்குள் ஒரு ஓவியன் மறைந்திருக்கும் உண்மையை அவன் கண்டுபிடிக்கும் நிமிடங்கள், ஊண் – உறக்கம் மறந்து அவன் ஓவியமே வாழ்க்கை என வாழ்தல், போரினேஜின் சுரங்கத் தொழிலாளர்களிடம் அவன் கொண்ட மனித நேயம், வறுமையிலும் ஓவியமே கதி என்றிருத்தல், விலைமாது ஒருத்தியுடன் குடும்பம் நடத்துதல், அன்புக்கும் காதலுக்கும் ஏங்கி நிற்கும் ஒரு அவலநிலை, என்ன செய்கிறோம் என்று தெரியாமலே காதல் கொண்ட பெண்ணுக்காக காதை அறுக்கும் அப்பாவித்தனம், மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும்போது வெறித்தனமாக ஓவியத்தை நேசிக்கும் குணம் – ஒவ்வொன்றையும் உயிர்ப்புடன் இந்நூலில் விவரித்திருக்கிறார் இர்விங் ஸ்டோன்.
வான்கா என்ற மகத்தான கலைஞனின் சோகங்கள் நிறைந்த அற்புத வாழ்வை நம் கண்முன் கொண்டு வந்து காட்டி, நம்மையும் அவன் வாழ்க்கையில் பங்குபெறும் மனிதர்களாக மாற்றிவிடும் மாயச் செயலை இர்விங் ஸ்டோன் செய்திருக்கிறார் என்பதென்னவோ உண்மை.
Be the first to rate this book.