இதயமும் சதையாகவே பார்க்கப்படும் பெண்களைப் பற்றிய கதை இது. சிதைக்கப்பட்ட இப்பெண்களின் வாழ்க்கை, அவர்கள் அறியாத அரசியலால் கொத்திக் குதறப்பட்டதாகும். உலகின் கண்களுக்கு மறைக்கப்பட்ட குருதிக்கறை படிந்த அந்த வரலாற்றின் ஓர் அசிங்கமான பக்கத்தை இந்தக் குறுநாவல் புரட்டிக்காட்டுகிறது. அதுவே, இதே பொருண்மையில் எழுதப்பட்ட பிற கதைகளிடமிருந்து இதை வேறுபடுத்துகிறது.
எங்குமே பெண்களின் மீதான மதிப்பு என்பது அவர்களது உடலை மையமிட்டதாகவே அமைகிறது. அந்த மதிப்பீடு ஆண்களின் உடலுக்குப் பொருந்துவதில்லை. அத்தகைய சீரழிக்கப்பட்ட பெண் உடலின் அவலங்களைப் பேசுவதன் மூலம் மீண்டும் ஒருமுறை நம் மனசாட்சியை நாமே உலுக்கிக் கொள்ளலாம். அரைமணி நேரத்துக்குள் படித்து முடித்துவிடக் கூடிய இந்தக் குறுநாவலுக்குள் ஒரு கனமான அரசியல் வரலாறும் புதைக்கப்பட்டுள்ளது. அடுத்தப் பதிவில் அதன் மையத்தைப் பேசுகிறேன். காடோடியைப் போல இதன் கதைக்களமும் அயல்நிலம்தான். ஏன் மீண்டும் அயல்நிலம் என்ற கேள்விக்கு எழுத்தாளர் ப.சிங்காரம் கூறுவதை முன்வைக்கிறேன்.
“வெள்ளைக்காரன் மூணு வருசம் நம்ம நாட்ல வந்து தங்கினாப் போதும். நம்ம வாழ்க்கையை வச்சு நாவல் எழுதிப்பிடுவான்… இன்னக்கி நம்ம ஆளுக இல்லாத இடம் உலகத்தில எங்க இருக்கு? ஆனால், போன இடத்துலே என்ன இருக்குன்னு கூர்மையாகப் பார்க்க மாட்டாங்க. அப்படிப் பார்த்திருந்தாங்கன்னா இன்னக்கித் தமிழில ஏகப்பட்ட புத்தகம் வந்திருக்கும்.”
நான் கூர்மையாகப் பார்த்தேன் என்பதற்கான சாட்சியே இந்நூல். இதுவும் தென்கிழக்காசிய எழுத்து என்பதாலும், இந்த ஆண்டு எழுத்தாளர் ப.சிங்காரம் அவர்களின் நூற்றாண்டு என்பதாலும் இந்தக் குறுநாவலை அவருக்கு சமர்ப்பித்துள்ளேன்.
- நக்கீரன்
5
Vinu Ganesan 02-06-2021 10:45 am