வள்ளலார்,பாரத தேசிய ஒருமைப்பாட்டை அடித்தளமாக வைத்து, அதன்மேல் மனித சமுதாய ஒருமைப்பாடு என்ற கட்டிடத்தை எழுப்பி, அதன்மேல் உயிர்க் குளத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் 'ஆன்ம நேய ஒருமைப்பாடு' என்னும் சமரச சுத்த சன்மார்க்கக் கொடியைப் பறக்க விட்டுள்ளார்.
இப்படி, மூன்று வகையான ஒருமைப்பாட்டினை அடிகளார் வலியுறுத்தியமையால், இந்த நூலுக்கு 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் பெயரைத் தந்துள்ளேன். பாலூட்டி எனது புறவுடலை வளர்த்த என் அருமைத் தாய் சிவகாமி அம்மையார், என் செவி வழியே திருவருட்பாப் பாட்டூட்டி என் அக உடலையும் வளர்த்தார்.
முன்னர்,கப்பலோட்டிய தமிழன்,வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய மாவீரர்களின் வரலாற்றை நான் வழங்கிய பிறகு, அவர்களுடைய புகழ் பாரெங்கும் பரவக் கண்டு மகிழ்ந்தேன். இந்த நூல் மக்கள் மத்தியில் பரவுமானால், வள்ளலார் புகழுக்குப் போடப்பட்டுள்ள திரை விலகி, அவருடைய உருவமும் உள்ளமும் உலகோர் அனைவருக்கும் புலப்படுமென்று நான் உறுதியாக நம்புகிறேன். அத்துடன்,உண்மையான சமுதாய சீர்திருத்த உணர்ச்சியும் தமிழ் மக்களிடையே தோன்றுமானால், அதனை யான் பெற்ற புண்ணியப் பேறாகக் கருதுவேன் !
- ம.பொ.சிவஞானம் (1.11.1963)
Be the first to rate this book.