ஆன்மிகப் புரட்சியாளராய் விளங்கும் அருட்பிரகாச வள்ளலார் இம்மண்ணில் வருவிக்கவுற்று 200 ஆண்டுகள் ஆகின்றது. சாதி, சமயம், மதம் என எல்லாவற்றையும் கடந்து நின்ற வள்ளலார் தமிழையும், தமிழினத்தையும் துறந்தாரில்லை. தமிழ்நாட்டில் தன்னைப் பிறப்பித்தமைக்காகவும், தமிழ்மொழியிலே கவிபாட வைத்தமைக்காகவும் பலவாறு எண்ணி எண்ணி இறைவனிடத்தில் மகிழ்ந்தவர். வள்ளலாரின் சீவகாருண்யம், சன்மார்க்கம், அறிவியல் சிந்தனை, மருத்துவக் குறிப்பு, மெய்யியல், என்பதான பல கோணங்களின் செய்திகள் இத்தமிழ்ச் சமூகத்தைச் சென்றடைந்திருந்தாலும், பிரபலப்பட்டிருந்தாலும் வள்ளலாரின் தமிழறிவுச் செறிவும், தமிழ்ப் பணியும் பெருவாரியான மக்களைச் சென்றடையவில்லை எனும் ஏக்கத்தினை தீர்க்கும் முயற்சியாக இந்நூல் அமைந்திருக்கிறது.
உரைநடையின் முன்னோடியாய், கல்வெட்டாராய்ச்சியின் தொடக்கப் புள்ளியாய், எழுத்துச்சீர்திருத்தத்தின் படிக்கல்லாய், எளிய தமிழில் பாமரர்க்கும் புரியும் பாடல்களை பாரதியாருக்கு முற்பட்டக் காலத்திலேயே தமிழுலகத்திற்குத் தந்தவராய், பதிப்பாசிரியராய், உரையாசிரியராய் வள்ளலாருடைய தமிழ்ப்பணியின் பல முகங்கள் இந்நூலில் காட்டப்பெற்றுள்ளன.
ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட திருவருட்பாவில் சிற்றிலக்கிய மரபுகளின் தாக்கங்களும், தொண்ணூறு, தொள்ளாயிரம் போன்ற தமிழ் மொழியின் சூட்சும விவரங்களும், தமிழ் எனும் சொல்லிற்கு த+மி+ழ் என்றும் த்+அ+ம்+இ+ழ் என்றும் எழுத்து வாரியாக வள்ளலார் வழங்கிய அற்புத உரைக்கு முதன்முதலில் எழுதப்பெற்ற விளக்கவுரையும் இந்நூலில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்களாகும்.
Be the first to rate this book.