மன அமைதியை வாரி வழங்கும் மகத்தான பொக்கிஷங்கள் நம்மிடம் இருப்பதை நம்மவர்கள் பலரும் அறிந்திருக்கவில்லை என்பதுதான் வியப்புக்கும் வேதனைக்கும் உரிய செய்தி. அந்த வகையில் மகத்தான விஞ்ஞான உண்மைகள் அடங்கிய நமது வேதத்தின் பல்வேறு உண்மைகள், தத்துவங்கள் மற்றும் நமது மண்ணுக்கே உரிய பலவகை வழிபாடுகள் என அனைத்தையும் பற்றி இந்நூலில் விரிவாகக் காணலாம்.
சூரிய வழிபாடு, விநாயகர் வழிபாடு, சித்ராபுத்ரர் வழிபாடு இவை அனைத்தைப் பற்றிய அற்புதமான புராணக்கதைகளும் நம்மிடம் உண்டு. இவை தொடர்பான பல வரலாற்று நிகழ்ச்சிகளும் உண்டு. மற்றும் இவற்றில் அடங்கியுள்ள ஆன்மீகத் தத்துவங்களும், அறிவியல் உண்மைகளும் படிப்பவர்களின் எப்பேர்ப்பட்ட மன இறுக்கத்தையும் தளர்த்தி சாந்தி அளிக்கவல்லவை.
நூறு, நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால்தான் அயல் நாட்டு விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட உண்மைகள் எல்லாம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளன என்பதை எண்ணும்போது நாம் வியப்பின் உச்சத்துக்கே சென்று விடுகிறோம்.
ஷண்மதங்களை நிறுவிய ஆதிசங்கரரும் ஞானிகளும் மகான்களும் எத்தனையோ வழிபாட்டு நெறிகளை நமக்குத் தந்துள்ளனர். விநாயகர் வழிபாடு முதல் நந்தி வழிபாடு வரை எண்ணற்ற வழிபாட்டு முறைகள் இங்கே உண்டு. இவை எல்லாவற்றிலும் வெறும் சடங்குகள் மட்டும் அல்லாமல் ஏராளமான உள்ளார்ந்த தத்துவங்களும் மறைந்து கிடக்கின்றன. பலவற்றில் ஆழ்ந்த விஞ்ஞான உண்மைகள் சொல்லப்பட்டுள்ளன.
“உலகம் முழுவதும் நிம்மதியைத் தேடி அலைந்தேன். அது இந்தியாவில் தெருக்கள்தோறும் இரைந்து கிடப்பதைக் கண்டேன்” என்றார் ஒரு ஜெர்மானிய அறிஞர்.ஆயிரம் ஆண்டுகால முகலாயர் ஆட்சியின் தாக்கம், முந்நூறு ஆண்டுகாலம் ஐரோப்பியர் ஆண்டதன் பாதிப்பு இவை எவற்றாலும் நமது மரபோ, கலாசாரமோ எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. அத்தகைய அற்புதமான ஆன்மீக நெறியை நம் முன்னோர் நமக்காக வகுத்துத் தந்துள்ளனர்.
Be the first to rate this book.