மனிதன் ஆற்றலோடு செயல்பட உணவே பெரிதும் உதவுகிறது. உண்ணும் உணவின் அடிப்படையில்தான் நமது ஆரோக்கியம் அளவிடப்படுகிறது. ஆர்வத்தின் மிகுதியில், காணும் எல்லா உணவுப் பண்டங்களை ருசித்துவிட முற்படுவது மனித இயல்பு. ஆரோக்கியத்துக்காக உணவு உண்ட காலம் கடந்து, உடலழகுக்காக உண்ணும் காலம் இது. இன்றைய நவீன காலத்துக்கு ஏற்ப, ஒரு மனிதனுக்கான உணவு எது, எவ்வளவு உண்ண வேண்டும், எந்த உணவில் என்ன சத்து அடங்கியுள்ளது, அமிலம் கலந்த கார உணவுகளின் வீரியத்தால் நிகழும் விளைவு... போன்ற பல்வேறுவிதமான உடல் உபாதைகளுக்குரிய ஆலோசனை வழங்கியுள்ளார் நூல் ஆசிரியர்.
அன்றாட உணவுகளான அரிசி, காய்கறிகள், தானியங்கள் மற்றும் பழங்கள் என ஒவ்வோர் உணவிலும் உள்ள ஊட்டச்சத்தையும் அதை உட்கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த நூலின் வழியே தெரிந்துகொள்ளலாம். செரிமானத்தை மட்டுப்படுத்தக்கூடிய துரித உணவுகள் எவை, சர்க்கரை - மன அழுத்தம் போன்றவற்றால் பாதிப்புக்குள்ளாவோர் எடுத்துக்கொள்ளவேண்டிய உணவு, குடல் எரிச்சலைப் போக்கும் உணவு முறை, உணவு உண்ணும்போது நாம் செய்யக்கூடியவை, செய்யக் கூடாதவை... என உணவு தொடர்பான அனைத்துத் தகவல்களும் உள்ள ஆரோக்கியப் பெட்டகம் இந்த நூல்.
உணவுக் கலவைகளுடன் அதில் பொதிந்துள்ள சத்துகளின் புள்ளிவிவரத்தையும் வெறும் வார்த்தைகளில் விளக்கிடாமல் வழக்குமொழியில் விளக்கியுள்ள இந்த நூல், ஒரு மனிதனுக்கான ஆரோக்கியக் காவல்காரன் என்றே சொல்லலாம்! நல்ல உணவுப் பழக்கவழக்கம், உரிய உடற்பயிற்சியும் இருந்தால், வரும் நாள்கள் அனைத்தும் நலமான நாள்களாக அமையும்!
Be the first to rate this book.