எந்தக் காலவரிசையிலும் அடங்காத வகையில் தன் நினைவிலிருந்து சொல்வதுபோல சித்தலிங்கையா பல அனுபவங்களை இந்தத் தன்வரலாற்றுப் பிரதியில் முன்வைக்கிறார். ஏற்கனவே வெளிவந்த ‘ஊரும் சேரியும்’ நூலின் இரண்டாவது பகுதியாக ‘வாழ்வின் தடங்கள்’ உருவாகியிருக்கிறது. தனித்தனியாகப் படிக்கும்போது, ஒவ்வொன்றும் ஒரு சின்ன அனுபவக்குறிப்பைபோன்ற தோற்றத்தை அளித்தாலும் பிரதியை முழுக்க வாசித்த பிறகு அனைத்துக் குறிப்புகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து தன்னைத்தானே முழுமைப்படுத்திக்கொள்ளும் விசித்திரம் நிகழ்வதை வாசகனால் எளிதாக உணர்ந்துவிட முடியும். பெரிய நாவலின் சின்னச்சின்ன அத்தியாயங்களைக் கலைத்துவைத்துத் தொகுத்ததுபோல சித்தலிங்கையாவின் தன்வரலாறு அமைந்திருக்கிறது. ஒரு வரலாற்றுக் காலகட்டத்தின் பண்பாட்டுச்சூழலில் இவை அனைத்தும் நிகழ்ந்திருப்பதை, கலையின் கண்களால் பார்த்து எழுதியிருக்கிறார் சித்தலிங்கையா.
அவர் கவிஞர் என்பதால் ஒவ்வொரு சம்பவத்தையும் கவிதைக்கே உரிய நெகிழ்ச்சியோடு அழகோடும் கோத்துக்கொண்டே செல்கிறார். சம்பவங்களிடையே அவர் விட்டுச் சென்றிருக்கும் இடைவெளியின் ஊடாக வரலாற்றை அறிந்துகொள்ளும் ஆர்வத்தையும் இன்னொரு கோணத்தில் தூண்டிவிடுகிறார் என்றே சொல்லவேண்டும். முப்பது நாற்பது ஆண்டுக்கு முன்னால் நிகழ்ந்த வாழ்க்கைச் சம்பவங்கள் ஒரே சமயத்தில் நேற்று நடந்ததுபோன்ற உணர்வையும் வெகுகாலத்துக்கு முன்பே நடந்ததுபோன்ற உணர்வையும் அளிப்பது ஆச்சரியம்.
Be the first to rate this book.