‘வாழைமர நோட்டு’ சிங்கப்பூரில் ஜப்பானிய ஆதிக்கத்தின் போது நடந்த நிகழ்வுகளைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பாதி வரை பிற நாடுகள் உட்புகுந்துவிடா வண்ணம் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தகங்களுக்குத் தன் கதவுகளைப் பூட்டியே வைத்திருந்தது. பின்னர் வந்த நாட்களில் மேலை நாடுகள் ஜப்பானிற்குள் வலுக்கட்டாயமாக நுழைய, சூழ்நிலை மாறியது. அதனைத் தொடர்ந்து ஜப்பானுக்குத் தென்கிழக்காசிய நாடுகளின் பக்கம் தன் பார்வையைத் திருப்ப வேண்டிய அவசியம் உண்டானது. அதன் எதிரொலியாக, அன்றைய காலனித்துவ ஆட்சியாளர்கள் சிங்கப்பூரின் காவலை வலுவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். கரையோரமிருந்த கோட்டைகளைப் பலப்படுத்தினார்கள்.
ஆனால், ஜப்பான் அவர்கள் எதிர்பார்த்திராத திசையிலிருந்து சிங்கப்பூரைத் தாக்கியது. அந்தக் காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளையும் வன்கொலைகளையும் இந்தப் புத்தகம் விவரிக்கிறது. இறுதியில் சிங்கப்பூர் ஜப்பானிடம் சரணடைய, சிங்கப்பூரின் அன்றாட வாழ்வியல் பாதிப்புக்குள்ளானது. சீனர்கள் ஜப்பானியர்களின் வெறித்தாக்குதல்களுக்கு உள்ளானார்கள். பிற இனத்தவர்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படவே செய்தது. ஏழ்மையும் உணவுப் பஞ்சமும் சிங்கப்பூரைப் பீடித்தது. ஜப்பானியர்களுக்கு எதிராக ஃபோர்ஸ் 136 இயக்கம் முளைத்தது. இந்திய தேசிய இராணுவம் ஜப்பானியர்களின் ஆதரவுடன் செழித்து வளர்ந்தது. அதன் பின்னர் நடந்த பல்வேறு நிகழ்வுகள் உலக அரசியல் போக்கில் மாற்றங்களை ஏற்படுத்த, ஜப்பான் நேசநாடுகளிடம் சரணடைந்தது. ஜப்பானிய ஆதிக்கத்தின் போது அடைந்த பாதிப்புகளிலிருந்து மீண்டெழுவது சிங்கப்பூருக்கு அவ்வளவு சுலபமானதாக இல்லை.
Be the first to rate this book.