புலிக்குத்தி சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளை எழுதிய காலக்கட்டத்தில் வாரணம் என்கிற தலைப்பில் மலையையும் யானையையும் வைத்து ஒரு கதை எழுதியிருந்தேன். அதை அந்தத் தொகுப்பில் சேர்க்க முடியவில்லை. புலிக்குத்தி வெளியான பிறகு கன்னியாகுமரி நிலப்பரப்பை வைத்து ஒரு பெரும் நாவலை எழுதத் தொடங்கினேன். அதன் பல அத்தியாயங்களை எழுதிக் கொண்டிருக்கும்போது ஒருசில பயணங்களால், வேலைகளால் அது தடைப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப்பின் அதனைத் தொடரலாம் என நினைக்கும்போது மனம், யானைகளைச் சுற்றியும், வனத்தைச் சுற்றியுமே வந்து கொண்டிருந்தது.
ராஜவனம் குறுநாவலை வாசித்துவிட்டு பேசும் நண்பர்கள் பலரும் அந்தப் புத்தகம் சிறியதாக இருக்கிறது. சீக்கிரமாக முடிந்து விட்டது எனச் சொன்னார்கள். அதனால் ராஜவனத்தின் தொடர்ச்சியாக ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்கிற திட்டம் உருவானது. அப்போதுதான் வாரணம் கதையை அடிப்படையாக வைத்து இந்த நாவலை எழுதத் தொடங்கினேன். அதன் ஒருசில நாட்களில் 2023 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது கடந்த ஜுன் 23ஆம் தேதி திருக்கார்த்தியல் புத்தகத்திற்கு அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு பயணங்கள், புத்தகக் கண்காட்சிகள், நண்பர்கள் சந்திப்பு என இரண்டு மாதங்கள் கடந்து போயின. மீண்டும் ஆசுவாசமாக அமர்ந்து எழுதத் தொடங்கினேன். அந்த நேரத்தில் பயணங்கள், நண்பர்கள் சந்திப்பைத் தவிர்த்து, தினமும் தொடர்ச்சியாக எழுதி முடித்தேன். அப்படித்தான் இந்த வாரணம் உருவானது. வாரணம் நாவலில், கன்னியாகுமரி நிலப்பரப்பில் மக்களுடைய வாழ்வியல் சார்ந்து நிகழ்ந்த மாற்றங்களையும், வனத்தை மையப்படுத்தியும் எழுதியிருக்கிறேன்.
Be the first to rate this book.