பன்னாட்டு மூலதன கம்பெனிகள் நம் தேசத்தில் நுழைந்து நம் செல்வங்களையெல்லாம் கொள்ளை கொண்டுபோகத் தலைப்பட்டுள்ள இந்த நாளில் வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சுதேசிக் கப்பல் கம்பெனியைத் துவக்கி எதிர்ப்புகளுக்கும் மிரட்டல்களுக்கும் அஞ்சாமல் அதை நடத்திய வ.உ.சி யின் வரலாறு தொழிலாளி வர்க்கத்துக்கு எடுத்துச் சொல்லப்படுகிறது.பாரத தோழா இதுதான் உன் பாரம்பரியம் என்கிற தொனியில்1908இல் தூத்துக்குடியில் வ.உ.சி துவக்கிய கோரல் ஆலைத் தொழிலாளர் சங்கம் நடத்திய முதல் வேலை நிறுத்தம் பற்றியும் அதற்கு ஆதரவாக தூத்துக்குடி நகர மக்களை வ.உ.சி திரட்டி மக்களுக்கிடையே வலுவான பிணைப்பை ஏற்படுத்திய வரலாறு பற்றியும் சொல்லப்படுகிறது. ஆத்திராமடைந்த வெள்ளை நிர்வாகம் வேறு காரணம் சொல்லி வ.உ.சி யைக் கைது செய்கிறது. உடனடியாக கோரல் ஆலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து தெருவில் இறங்கினர். இந்தியாவின் முதல் அரசியல் வேலை நிறுத்தம் இதுதான் என்பதை ஆதாரத்துடன் புத்தகம் சொல்கிறது.வ.உ.சி கைதை ஒட்டி நெல்லை நகரம் கொதித்து எழுகிறது.பொதுமக்களும் மாணவர்களும் தொழிலாளிகளும் பங்கேற்கும் ஊர்வலத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடக்கிறது.ஒரு முஸ்லிம்,ஒரு பறையர்,ஒரு பூசாரி,ஒரு ரொட்டிக்கடைத் தொழிலாளி என நான்கு பேர் களப்பலி ஆகின்றனர்.தூத்துக்குடியில் வெள்ளையருக்கு ஆதரவாகப் பேசும் அதிகாரிகளுக்கு சவரம் செய்ய நாவிதர்கள் மறுக்கிறார்கள்.துணி துவைக்க சலவை தொழிலாளிகள் மறுக்கிறார்கள். துப்புரவு பணியாளர்கள் மறுப்பு காரணமாக வெள்ளையர் வீடுகள் நாறுகின்றன.தொழிற்சங்கமும் பொதுமக்களும் இரண்டறக் கலந்து நின்ற வரலாறு உணர்ச்சிகரமாக நம் கண் முன்னே விரிகிறது.
Be the first to rate this book.