சிங்கத்தின் மீதமர்ந்த, உலகைக் காக்கும் இறைவி ஜகத்தாத்ரியின் நான்கு பெரும் சிலைகள் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தன. உள்ளே அடைக்கப்பட்டிருந்த வைக்கோல் எரிவது மெல்லிய களிமண் பூச்சு வழியாகத் தெரிந்தது. சிங்கங்கள் சில்லிட்ட களிமண்ணால்தான் மூடப்பட்டிருந்தன. தேவியர் பற்றி எரிந்தபடி ஊர்வலமாக செல்வதுபோலிருந்த அந்தக் காட்சி அமானுஷ்யமானதாக, தீமைக்கு முன்னறிவிப்பு போல இருந்தது...’
தோல் கொண்டு செருப்பு தைக்கும் செம்மான் சாதியில் பிறந்தவன் களிமண்ணும் வைக்கோலும் கொண்டு சிற்பம் செய்யும் கலைஞனாய் ஒளிர்வதைச் சொல்லும் இந்நாவல் அனிதா அக்னிஹோத்ரி அவர்களால் வங்க மொழியில் எழுதப்பட்டது.
1960 - 70 களில் வங்காளத்தின் இளைய தலைமுறையை முற்றாக அழித்தொழித்த நக்ஸல் இயக்கத்தின் வன்முறைப் பின்னணியில் கதை விரிகிறது. கலைஞன் ஒருவனின் போராட்டத்தையும், அரசால் ஒடுக்கப்பட்ட நக்ஸல் புரட்சியாளர்களின் குடும்பங்களின் அவலத்தையும் ஊடும் பாவும் என நெய்துள்ள ஆசிரியர் மிகச்சிக்கலான பேசுபொருளை நுட்பமாக கையாண்டிருக்கிறார்.
சாதிவெறிப் பின்னணியில் கலைஞனின் இருப்பை, புரட்சிப் பின்னணியில் காதலை, உறவுகளிடையே மோதல்களை, இழப்புகளை சொல்லிச் செல்லும் நாவல். கலையும், காதலும், தாய்மையும் உயிர்த்தெழும் தருணங்களை ஆரவாரமின்றி பதிவுசெய்யும் ஆக்கம்.
அனிதா அக்னிஹோத்ரி - வங்காள மொழியில் எழுதுபவர். இந்திய ஆட்சிப் பணியில் இருந்தவர். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரை, சிறுவர் இலக்கியம் என 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவரது படைப்புகள் அனைத்து முதன்மையான இந்திய மொழிகளிலும், ஜெர்மன் மற்றும் சுவீடிஷ் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
Be the first to rate this book.