புகுவதே தெரியாமல் உடலில் புகுந்து மனித உயிரை மாய்க்கும் மாய அரக்கன் புற்று. வயது வித்தியாசமின்றி எவருள்ளும் நுழைந்து உயிரணுக்களைத் தின்று மனிதனை மரணிக்கச் செய்கிறது இந்தக் கொடிய நோய். இந்த நோய்க்கு தற்காலிக சிகிச்சை பெற்று உலகில் உயிர் வாழ்வோர் எண்ணிக்கை எண்ணிலடங்கா. இதற்கு நிரந்தரத் தீர்வு என்பது இன்னும் கானல் நீராகவே உள்ளது. மனித இனத்தை அச்சுறுத்தும் உயிர்க்கொல்லி நோய்கள் தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருந்தாலும், நவீன மருத்துவ விஞ்ஞானத்தால் அவற்றை எதிர்கொண்டு வருகிறது மனித சமூகம்.
ஆனால் சில நோய்களை வராமல் தடுக்க முடியவில்லை. அவற்றில் புற்றுநோய் மனிதனை விடாமல் சுற்றிக்கொண்டிருக்கிறது. இன்று ஒருவருக்கு புற்று நோய் வருவதற்கு கணக்கில்லா காரணங்கள் இருக்கின்றன. காரணம் நம் வாழ்க்கைச் சூழலும் புறச்சூழலும் எல்லாமே வேகமாகிவிட்டன. இதனால் வருமுன் காத்தல் என்பதை மறந்து, புற்று நோய் வந்த பின்னர் புலம்புகிறோம். புற்று நோய் தாக்குதலில் இருந்து, நம் வாழ்க்கை முறையால் நம்மை எப்படி காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை பல தளங்களிலும் ஆராய்ந்து கூறுகிறார் மருத்துவர் கு.சிவராமன். ‘உண்ணும் ஒவ்வொரு கவளம் உணவிலும், உறிஞ்சும் ஒவ்வொரு சொட்டு தண்ணீரிலும், சுவாசிக்கும் ஒவ்வொரு துளி மூச்சிலும் புற்றுக்காரணி புறப்பட்டிருப்பதை அறிவோம்.‘ என்று எச்சரிக்கும் மருத்துவர் சிவராமன், புற்று நோய் வராமல் தடுத்துக்கொள்வதற்கான வழிமுறைகளையும் இந்த நூலில் விளக்கியுள்ளார்.
ஆனந்த விகடனில் தொடராக வந்து, பெரும் வரவேற்பைப் பெற்ற உயிர் பிழை, இப்போது நூலாகியிருக்கிறது. நேற்று சிலருக்கு வந்த புற்று நோய் இன்று பலருக்கும் வருகிறது, நாளை யாருக்கும் வரக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்துடன் படைக்கப்பட்டிருக்கிறது இந்த நூல்.
Be the first to rate this book.