ஒரு மனிதன் பிறந்து அவன் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளைவிட அவன் கருவாக உருவாவதற்கே எத்தனையோ மெனக்கெடல்கள் நிகழ்கின்றன. திருமணமான ஆறேழு மாதங்கள் கழித்து ‘என்ன விசேஷம் எதுவும் இல்லையா?’ என்று தம்பதியைப் பார்த்துக் கேட்பது நம் கலாசாரத்தில் கலந்துவிட்ட கேள்வி.
உயிராக்கல் என்பது எல்லா உயிரினங்களுக்கும் இயற்கை கொடுத்திருக்கும் கொடை. ஆனால் அந்த உயிர் உருவாவதற்குத்தான் எத்தனை நிலைகளைத் தாண்டவேண்டியிருக்கிறது. அதிலும் மனித உயிர் உடலாகி மண்ணில் தவழ, எத்தனை உடலியல் மாற்றங்கள் நிகழவேண்டியிருக்கிறது. அப்படி ஓர் உயிர் உருவாகும் ஒவ்வொரு நிலைகளைப் பற்றி பேசுகிறது இந்த நூல்.
கருத்தரிப்பதற்கு ஏற்ற தாம்பத்ய முறை, கருத்தரிப்பு தள்ளிப்போவதற்கான காரணங்கள் என்னென்ன என்பவை பற்றி அலசி ஆராய்ந்து நல்ல தீர்வைக் கூறுகிறார் நூலாசிரியர். உதாரணமாக இப்போது ஜீன்ஸ் அணியாத இளைஞர்களே இல்லை என்ற நிலைதான் உள்ளது. ஆனால், இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் ஓர் ஆணுக்கு உயிரணுக்குள் குறைந்துபோகிறது என்கிறார் மருத்துவர் கு.சிவராமன்.
இது பெண்ணுக்கும் பொருந்தும். உணவு முறையிலும் உடை விஷயங்களிலும் நாகரிகம் எனும் பெயரால் ஆண்-பெண் இருபாலரும் செய்யும் சின்னச் சின்ன தவறுகளாலும் ஒரு பெண் தாய்மை அடைவது தாமதமாகிவிடுகிறது அல்லது தாய்மையடையாத நிலை ஏற்படுகிறது. குழந்தைபேறு பெற்று தம்பதியர் மகிழ்வுற இந்த நூல் நல்லதொரு வழிகாட்டி!
Be the first to rate this book.