”மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து இல்லாவிட்டாலும் மனித சமூகம் தோன்றிய காலத்திலிருந்து உரிமைகளுக்கான ஆதங்கம் இருந்து வந்திருக்கும் ஏனென்றால் சமூகத்தில் எப்போதுமே ஆதிக்கம், அதிகாரம் செலுத்துபவர்கள் சிலர் இருக்கையில், அவற்றிற்கு ஆளாகிறவர்கள் பலர் இருந்துவந்தனர். அந்த விஷயத்தை அன்று அவர்கள் தெளிவாக காண முடிந்தாலும், காண முடியாவிட்டாலும் அது இருந்து வந்தது. துவக்க காலத்திலிருந்தே உங்களுக்கு அதிகாரம் ஏன் இருக்க வேண்டும். நாங்கள் ஏன் அந்த அதிகாரத்தை ஏற்க வேண்டும் என்கிற கேள்வி எழுந்தபடியே இருந்திருக்க வேண்டும். கேள்வி எழாமல் இருந்தது என்று நினைக்கவில்லை. உண்மையில் ஒரு வகையில் மனித குல வரலாற்றையே இந்தக் கோணத்திலிருந்து எழுதலாம். அவ்வாறு எழுதினால் அது வலுவான முன்வைப்பாகவே இருக்கும்.”
4 Human rights book
பீட்டர் துரைராஜ். தன்முதலான( original) சிந்தனையாளரும் மனித உரிமைப் போராளியுமான, டாக்டர். கே.பாலகோபால் தெலுங்கில் எழுதியவற்றை “உரிமைகள்: ஒரு தத்துவக் கண்ணோட்டம்” என்ற பெயரில் சிந்தன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கே.மாதவ் மொழி பெயர்த்துள்ள இந்த நூல் ஜனநாயக ஆர்வலர்கள் மத்தியில் சலனத்தை, தூண்டுதலை கண்டிப்பாக ஏற்படுத்தும். பாலகோபால் முப்பதாண்டு காலம் உரிமைகள் இயக்கப் பயணத்தில் தீர்மானகரமான பங்காற்றியவர். அவருடைய கட்டுரைகள், சொற்பொழிவு, துண்டறிக்கை, பாடத்திட்டம் , கேள்வி-பதில், அஞ்சலி, தலையங்கம் ,பேட்டி இவைகளைத் தொகுத்து இந்த முன்னூறு பக்க நூல் வந்துள்ளது. மனித உரிமை இயக்கங்கள் நடத்துவதற்கு ஏறக்குறைய சட்டப்பூர்வ அனுமதி ஏதுமில்லை. நடக்கின்ற வன்முறைகளை எதிர்த்து ,ஜனநாயக இயக்கங்கள் தாமாக தோன்றுகின்றன; தவழ்கின்றன; நடக்க ஆரம்பிக்கின்றன.அத்த இயக்கங்களுக்கு முன்மாதிரி இல்லை. இந்நிலையில் அது போன்ற இயக்கங்களை நடத்தியவர்களின் அனுபவங்களே ‘ விதிகளாக’ பரிணமிக்கின்றன.இது அப்படிப்பட்ட நூல்தான். பாலகோபால் தான் கூறுகின்ற கருதுகோள்களுக்கு தத்துவமுலாம் ஏதும் பூசவில்லை; எந்தத் தலைவர்களின் மேற்கோள்களையும் சுட்டிக்காட்டவில்லை.இப்போது இருக்கின்ற ஜனநாயக பெறுமதிகளை எப்படிப் பாதுகாப்பது ? அதனை எப்படி விரிவு படுத்துவது ? அதன் மூலம் மக்களுடைய உரிமைகளை எப்படி விரிவு படுத்துவது என்று பேசுகிறார். இதுதான் இந்த நூலின் ஆதாரசுருதி.இதை வாசிப்பவர்கள் மனதில் விதைக்கச் செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறார். இவர் எழுப்புகிற ஐயங்களும், கேள்விகளும் இயல்பானவை. க.மாதவ் இதனை பாங்குற மொழிபெயர்த்து இருக்கிறார்.பாலகோபாலின் மற்றொரு நூலான “கருத்தாயுதம்” (வகுப்புவாதத்தை எதிர்கொள்ள )நூலையும் இவர்தான் மொழிபெயர்த்தவர். பாராட்ட வேண்டிய பணி. சாதாரணமாக எந்த இயக்கமும் ‘பெருமக்கள் திரளை’ கூட்ட வேண்டும் என்றுதானே வழக்கமாகச் சொல்லுவார்கள்; பாலகோபால் இதில் மாறுபடுகிறார். “உடனடிப் பொருளாதார- சமூக நலன்கள் இல்லாத இயக்கம் எதுவும் மக்கள் இயக்கமாக மாற முடியாது ” என்று நினைக்கிறார். “ஒரு உரிமை முதலில் சிலரின் சிந்தனைகளில் உருவம் பெறும். அரசியல் நடைமுறையில் அங்கீகாரத்தைப் பெறும். அதாவது சட்டம், அரசியலமைப்பு விதி,பழக்க வழக்கம் அனைத்தும் அதனை உரிமைகளாக அங்கீகரிக்கும்.ஏதாவது ஒரு வடிவத்தில் நிறுவனப்படுத்தப்படும்” என்று சொல்லி மேலும் சொல்கிறார் ” அதன் அமலாக்கத்தில் மேலும் சில குறைபாடுகள் இருக்கும்; அக்குறைபாடுகளை அகற்றுவதற்காக போராட வேண்டும்” என்கிறார். இத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு புதிய செய்திகளை இந்நூல் சொல்லுகிறது.” உரிமைகள் பிரகடனத்திலேயே வரம்புகளைக் குறிப்பிட்ட அரசியலமைப்புச் சட்டம் நம்முடையது தவிர வேறு எதுவும் இல்லை ” என்கிறார். ‘கம்யூனிஸ்ட் கட்சி அரசதிகாரத்தைக் கைப்பற்றினால் அனைத்து மாற்றங்களும், அனைத்துச் சீர்திருத்தங்களும் ஒரேயடியாக எவ்வாறு சாத்தியமாகும் என்பது புரியவில்லை’ என்கிறார். மனித மூளைகளை அந்தத் திசையில் ‘தயார்’ படுத்த வேண்டும். இந்தியாவில் தூக்குத் தண்டனைகளை அரிதான வழக்குகளில் விதிக்கிறார்கள்; மேற்குலக நாடுகள் அதனை ரத்துச் செய்து விட்டன. ஆனால் சீனாவில் ‘ ‘எதிர்புரட்சியாளர்களுக்கு’ மட்டுமின்றி சாதாரண குற்றவாளிக்கும் தூக்குத் தண்டனை விதித்தனர் என்கிறார்.’ ‘செக்கோஸ்லோவேக்கியா, ஹங்கேரி போன்ற நாடுகளில் கம்யூனிஸ்டு கட்சிகளின் அரசாங்கங்கள் வந்த பின்னும் உரிமைகள் சங்கங்கள் ஏற்பட்டன;ஆனால் அனேகமாக அனைத்தும் ரகசியமாக செயல்பட்டன’. சட்டத்தின் ஆட்சி( rule of law)என்பதற்கு இங்கிலாந்தில் நானூறாண்டு போராட்டம் நடந்தது என்கிறார்.’ ரூல் ஆஃப் லா’ என்பதற்கு சரியான மொழிபெயர்ப்பு இல்லை (நம்மில் யாருக்கும் அதன் மதிப்பு தெரியாது) ஆகையால் அதற்கு வேண்டிய மொழியும் வளர்ச்சி அடையவில்லை என்கிறார்.’ ‘ சந்தால் போராட்டமும், ரம்ப பிதூரிகள் போராட்டமும் தொடர்ந்ததாலேயே பழங்குடியினருக்கு காட்டுப்பிரதேசங்கள் மீது சில பிரத்யேகமான உரிமைகள் வந்தன’ என்கிறார்.’ இந்தியா ஜனநாயக ரீதியாக பின் தங்கிய நாடு ” என்கிறார்.’ ஜனநாயகத்தை மதிப்பதும் காப்பாற்றிக் கொள்வதும் அவசியம்’ என்கிறார். ‘அனைவரையும் விடுதலை செய் ‘ என்கிற முழக்கம் அரசியல் ரீதியாக தவறானது என்கிறார்;இறந்து போன, பலியான முக்கிய ஆர்வலர்களைப் பற்றி இவர் எழுதிய அஞ்சலிக் குறிப்புகள் ஒரு அத்தியாயத்தில் வருகின்றன. ஒட்டுமொத்தத்தில் உரிமை பேசும் அனைவருக்கும் இது ஒரு கையேடாக உள்ளது. இந்த நூல் அதன் பெயருக்கொப்ப ஒரு பரந்துபட்ட பார்வையைக் கொடுக்கிறது. சிந்தன் புக்ஸ்/9445123164/ kmcomrade@gmail.com/ரூ.200/ பக்கம் 312/ முதல் பதிப்பு 2016 பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர் நன்றி : thetimestamil.com
peter durairaj 11-03-2018 09:28 pm