தனக்கும் பிறருக்குமான உறவு என்பது பல்வேறு கொடுக்கல், வாங்கல்களுக்கு இடையே பெரிதும் உலகியல் தளத்தில் நிகழக்கூடியது. அதுவே தனக்கும் இப்பிரஞ்சத்திற்குமான தொடர்பு என விரியும் போது அது அகவயமான நிலையில் முற்றிலும் நேரெதிரான திசையில் இயங்கக்கூடிய ஒன்று. அது கடவுள் மறைந்து விட்ட பிரபஞ்சத்தில் மனிதனை ஆற்றுவிக்கக்கூடிய ஒரு வகை விடுதலை உணர்வாகும். அவ்வகையில் இவ்வுலகியல் தளத்தையும், அதற்கப்பாலான நிலையையும் பிரிக்கும் தெளிவற்றதொரு எல்லைக் கோட்டருகில் நின்றவாறு எழுதும் ஸ்காண்டிநேவியக் கவிஞரான தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமரின் கவிதைகள் மரணம், வரலாறு, நினைவுகள் போன்ற மானுடப் பொதுவான கருப்பொருள்களையும், காலந்தோறும் எழுப்பப்படும் நிலைத்த கேள்விகளையும் எதிர்கொள்பவை.
இவருடைய கவிதைகளில் தென்படும் மானுடம் மீதான அக்கறை வெகுசில கவிஞர்களிடம் மட்டுமே காணக்கிடைப்பது எனக்குறிப்பிடும் சபரிநாதன் இக்கவிதைகளை ஒரு வேலையாக அல்லாமல் அவரை மொழிபெயர்க்க வேண்டும் என்கிற உத்வேகத்தினால் தூண்டப்பட்டு மொழிபெயர்த்திருக்கிறார். மொழியாக்கத்தை 'சமரசங்களின் கலை', 'தோல்வியுறும் தொழில்', 'படைப்புச் செயல்பாட்டின் ஆனந்தம் கிட்டாத வேலை' என்றெல்லாம் பலவாறு கூறிக் கொண்டபோதிலும் மிகவும் அனுபவித்து, ரசித்து, இம்மொழிபெயர்ப்பு நூலை உருவாக்கி தந்திருக்கிறார் சபரிநாதன். முன்னுதாரணமான தொகுப்பு.
Be the first to rate this book.