திருக்குறள் உலகப் பொதுமறை. வாழ்வின் உன்னதமான தத்துவத்தை செறிவுடன் அடக்கிய வாழ்வியல் இலக்கணம். தன் கருத்துச் செறிவால் தமிழின் ஒளிச் செறிவை உலகுக்கு வெளிச்சமிட்ட நன்னூல். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டதாக இருந்தாலும், அதன் கருத்துகள் இன்றும் மனித வாழ்வுடன் பொருந்தி நிற்கின்றன. இன்று அறிவியல், நாகரீக முன்னேற்றத்தால் மனித சமூகம் ஒரு மாறுபட்ட சூழலில் வாழ்ந்து கொண்டிருந்தாலும், திருக்குறள் கூறும் அறம், பொருள், இன்பம் ஆகிய கருத்துகளின் வலுவான மையத்தைச் சுற்றியும், அந்த சக்தி மிகுந்த கருத்துப் புலத்தின் கட்டுப்பாட்டிலும் மாறுதல்கள் அடைந்து கொண்டிருக்கின்றன. உலகத்தின் மையமாக குறள் இருக்கிறது. உலகம் மாறலாம்; காலம் மாறலாம்; மனிதர்கள் மாறலாம்; எல்லா மாறுதல்களிலும் மனிதன் அழிந்துவிடாதபடி குறள் மட்டும் ஒளிகாட்டி, வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. குறுகத் தரித்த குறளுக்குள் அகல விரிந்த ஆழமான கருத்துகள் பொதிந்த வள்ளுவரின் வித்தையால், தமிழ் அமுதமாக உலகெங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது.
Be the first to rate this book.