பண்டைய மரபு, கலாசாரம், பழக்கவழக்கம் ஆகியன உணவிலிருந்தே தொடங்கியது என்றால் மறுக்கமுடியாது. வாழ்க்கையின் மையமே வயிறுதான். தாயின் வயிற்றிலிருந்துதான் உணவு தொப்புள்கொடி வழியாக குழந்தைக்குச் செல்கிறது. அவ்வகை உணவில் நஞ்சு கலக்கப்பட்டால்? குழந்தைக்கு அடிப்படையான உணவு பால். அந்தப் பாலில் தொடங்கி, அனுதினம் உண்ணும் உணவில் பாதி விஷம் என்றால் நம்மால் ஏற்றுக்கொள்ளமுடியுமா? ஆனால் அதுதான் நிஜம்.
உணவுப் பொருள் கலப்படங்களை அம்பலப்படுத்தி நம்மை அதிரவைத்து எச்சரிக்கிறது இந்த நூல். ‘ஆக்சிடோசின்’ - மாடு மூலம் மனிதன் உடலிலும் கலந்த ஒரு நச்சு. ‘ஹெக்சேன்’ - பெட்ரோலிய கச்சா எண்ணெயின் கழிவுப்பொருள். இது உணவு சமைக்கும் எண்ணெயில் கலக்கப்படுகிறது. ‘அலோக்சான்’ - எலிக்கு சர்க்கரை நோயை வரவழைக்கும் ரசாயனம். இதை சேர்த்துதான் மைதா மாவை மென்மையாக்குகிறார்கள். பாப்கார்னின் சுவையைக் கூட்ட, சேர்க்கப்படும் ரசாயனம் ‘டைஅசிட்டைல்’. நூடுல்ஸ் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க `வேக்ஸ்’ எனும் மெழுகு தடவப்படுகிறது.
இதுபோன்ற அதிர்ச்சி தரும் தகவல்களைக் கொடுப்பதோடு எந்தெந்த உணவுகளில் எந்தவகை நச்சுகள் கலந்திருக்கின்றன, அதனால் என்னென்ன நோய் உண்டாகிறது? அவற்றுக்கு மாற்று என்ன? என்பதையும் எடுத்துக்காட்டியிருக்கிறார் நூல் ஆசிரியர் உமர் பாரூக். டாக்டர் விகடனில் வெளியான தொடர் இதோ உங்கள் கைகளில் நூல் வடிவில். இயந்திரங்களும் நாகரிகங்களும் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் இயற்கையோடு இணைந்து வாழாமலும், உணவு குறித்த விழிப்பு உணர்வை மக்கள் பெறாமலும் இருப்பது எதிர்காலத் தலைமுறையை நிச்சயம் பாதிக்கும். நச்சு கலப்பட உணவை அறிந்துகொள்ளச் செய்து நம் ஆரோக்கியம் காக்க வழிகாட்டுகிறது இந்த நூல்.
Be the first to rate this book.