ஆட்சியாளன் ஒருவன், செங்கோலின் வலிமையையும் கிரீடத்தின் கம்பீரத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு, மக்கள் மீதான அன்பு, இறையச்சம், நேர்மை ஆகியவற்றை மட்டுமே தன் அதிகாரங்களாகக் கொண்டு ஆட்சி நடத்தமுடியுமா? முடியும் என்று நிரூபித்தவர் இரண்டாவது கலீஃபாவான உமர். முகமது நபியின் கடுமையான எதிரியாக, அவரைக் கொலை செய்யும் வெறியுடன் அலைந்துகொண்டிருந்தவர், முகமதுவை நேரடியாகக் காணும்போது மனம் மாறி, அவருடன் சேர்கிறார். பின் நபியின் அத்தனை போர்களிலும் பங்கேற்கிறார். அவரது மறைவுக்குப் பின், முதலாம் கலீஃபா அபுபக்கரின் பக்கபலமாக இருக்கிறார்.
ஆட்சி உமரிடம் ஒப்படைக்கப்படும்போது, அவர் களிப்படையவில்லை. கிழிந்த, ஒட்டுப்போட்ட ஆடைகளையே அணிகிறார். மக்கள் குறையைத் தீர்ப்பதிலேயே காலத்தைக் கழிக்கிறார். கஜானாவிலிருந்து தன்னிஷ்டத்துக்குப் பணம் எடுத்துக்கொள்வதில்லை. கலீஃபாவாக, சுல்தானாக அவர் ஆண்ட ராஜ்ஜியம் விரிந்து பரந்திருந்தது. உயிர் பிரியும் நேரத்தில் அவரிடம் இருந்தது கடன்கள் மட்டுமே. தொழுகை நேரத்தில் எதிரி ஒருவனால் கத்தியால் குத்தப்பட்டு உயிர்விடும் உமர் தன் கொலையாளிக்குக் கருணை கேட்கிறார். வரலாற்றுச் சம்பவத்தின் அடிப்படையில் மலையாளத்தில் நூறநாடு ஹனீஃபால் எழுதப்பட்ட இந்தப் புதினத்தை நிர்மால்யா தமிழில் மொழிபெயர்த்துள்ளார். புதினம் என்பதற்கு மேலாக, விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்ட வரலாறாகவே இதனைக் கொள்ளலாம்.
Be the first to rate this book.